போதும் நிறுத்திக்குவோம்....!

Tuesday, July 28, 2009

அநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....

ஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த காலங்களில் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறேன். எழுதியதை படிக்கும் போது ஒரு நேர்கோடான கர்வமும், மெல்லிசான திமிரும் எனக்கு்ள் இழையோடியதை ரசித்திருக்கிறேன்.

பிடித்தது எழுதினேன்..இப்போது அத்தனை பிடிப்பில்லை....

கடந்த ஆண்டுகளில் செய்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டிலும் அத்தனை ஆர்வமில்லை...

சிலர் பிரயோசனமாயிருக்கிறது என கருதுவதால் எனது வர்த்தக பதிவுகளை மட்டும் தொடர்ச்சியாக இயக்குவதாயும், தனிப்பட்ட பதிவுகளை இத்துடன் நிறுத்திக்கொள்வதாயும் முடிவெடுத்திருக்கிறேன்.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களை இனி அனுமதிக்க வேண்டாம். அவை என்னுடையதில்லை.

இந்த முடிவுக்கு பின்னால் வருத்தமெல்லாம் இல்லை...அயற்சியே...

என்றும் அன்புடன்..

-யட்சன்



பதிப்பிக்க மறந்து போன பதிவு...

Saturday, July 11, 2009

போன மாதத்தில் ஏதோவொரு நாளில் எழுதியது, பதிப்பிக்க மறந்து போன பதிவு இது...திருத்தமெதுவும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கிறேன்....சோம்பேறித்தனம்!

இனி பதிவு...


என்னிடம் இரண்டு இனைய தொடர்புகள் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல இரண்டுமே செயலிழந்து விட திருவிழா கூட்டத்தில் தொலைந்த சிறுவனை போலாகிவிட்டது என் நிலமை. இனையமில்லாத காலத்தில் வேறு சில உருப்படியான காரியங்களை செய்யலாமென நினைத்து சிலவற்றை முடிக்கவும் பலதை மேலும் குளறுபடியாக்கியதையும் இந்த இடத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

கல்கி, சாண்டில்யன்,சுஜாதா செத்துப் போனதின் பின்னால் அவர்களின் இடத்தினை அல்லது பாணியினை நிரப்ப யாரும் இதுவரை முயற்சிக்கவில்லையென நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி....வெறும் டயரி குறிப்புகள் மாதிரி பதிவெழுதுவதை காட்டிலும் தீவிரமாய் ஒரு எழுத்தாளரின் தேர்ச்சியுடன் பதிவெழுத வேண்டுமென்கிற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எனவே இனி என் பதிவுகளுக்கு வருவதை பற்றி மறுபரிசீலனை செய்ய ஆரம்பியுங்கள்...சிகரெட் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை மாதிரியானதே முந்தைய வரி....

சமீபத்தில் படித்த ஒன்று அடிக்கடி மண்டைக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது....இதன் சாத்தியம் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டலாம் அல்லது தனியே பதிவு போட்டு தங்களின் புத்திசாலித்தனத்தை காட்டலாம்.

.....பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இந்த பதிவினை நீங்கள் படிக்கும் இந்த நிமிடம் வரையில் அதே அளவு அணுக்கள்தான் இருக்கிறதாம். புதிதாய் எதுவும் தோன்றவில்லையாம், அல்லது இனியும் தோன்றபோவதில்லையாம். இந்த அணுக்களின் கூட்டணு தொடர்கள்தான் மாறி மாறி வேறு வேறு உருவங்களாய் அல்லது உயிர்களாய் மாறுகிறதாம்....

...அதாவது ஒரு அணுவின் வாழ் நாள் சற்றேறக்குறைய 100000000000000000000000000000000000 வருஷங்களாம்....ஆக, என்றைக்கோ அழிந்து போன டைனசோரிலிருந்து முந்தா நாள் செத்துப்போன இலங்கை தமிழன் வரையில் யாருக்கும் அழிவில்லை.இவர்களின் அணுக்கள் மறு சுழற்சியடைந்து தாவரமாகவோ, தனிமமாகவோ அல்லது நாளை உங்களின் பேரப்பிள்ளையாகவோ பிறப்பெடுக்கும் சாத்தியங்களை மனதில் கொள்ளுங்கள்.

ப்ரபஞ்சம் என்றவுடன் "Big Bang Theory" நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இதுபற்றி தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. இதையெல்லாம் ச்சின்ன ச்சின்ன வரிகளில் எளிமையாய் பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாமென தோணுகிறது. சிலவருடங்களுக்கு முன்னால் வரை எனக்கும் இதுகுறித்து பெரிதாய் எதுவும் தெரியாதுதான். இப்போது மட்டும் என்னவாக்கும் என கேட்டீர்களேயானால் அரைகுறையாய் அதுகுறித்து ஒரு பதிவு போட நான் ரெடி...புத்திசாலியான நீங்கள் கேட்கமாட்டீர்களென்கிற நம்பிக்கையிருக்கிறது.....

தேவி ஸ்ரீ ப்ரசாத், தெலுங்கு சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர்.இவரது தெலுங்கு மெட்டுக்கள் மொழிமாற்றி படங்கள் மூலம் நம் காதுகளுக்கு வந்து கொண்டிருந்தது. தசாவதாரம் படத்தின் பிண்ணனி இசை கூட இவருடையதுதான். இப்போது நேரடியாக கந்தசாமி படத்தின் மூலம் தமிழில் தரையிறங்கியிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, பாடல்கள் சூப்பர் ஹிட்.

தியாகராஜ பாகவதருக்குப் பின்னால் எல்லா பாடல்களையும் படத்தின் நாயகன் விக்ரமே பாடியிருக்கிறார். ரொம்பவும் மெனக்கெட்டு எஸ்.பி.பி மாதிரி பாட முயற்சித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கேட்கவும் நன்றாகத்தானிருக்கிறது.....ஆனால் என்னுடைய ஃபேவரைட் எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமியில் உடன் பாடியிருக்கும் சுசித்ராவின் குரல்தான். எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் பின்னால் தமிழில் ஒரு வயாக்ரா குரல் ..... எஃப்.எம் தொகுப்பாளராய் அவர் பேசுவதை கேட்கத்தான் எரிச்சலாயிருக்கிறது. தவளை கத்துவது போல பேசுகிறார். பேசாமல் முழு நேர பாடகியானால் சந்தோஷப்படுவேன்.

தேவி ஸ்ரீ ப்ரசாத் தெலுங்குகாரராயிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தானாம்....தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் உறவினர் என்பதால் இவரின் திரையுலக பிரவேசம் எளிதாய் அமைந்திருந்தாலும் தன் திறமையால் தனது இடத்தை தக்கவைத்திருக்கிறார் இந்த இளைஞர். தோல் வாத்திய கருவிகளையும் அதன் தாளக்கட்டுகளையும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது என்னுடைய அவதானிப்பு.

நமீதாவிற்கு வயதாகிக் கொண்டே போகிறது, அன்மையில் ஒரு பாடல் காட்சியில் அவரின் நடன அசைவுகளை பார்க்க வருத்தமாயிருந்தது....குலுக்குவதையெல்லாம் ஆடுகிற இலக்கணத்துக்குள் கொண்டு வரமுடியாதில்லையா......ம்ம்ம்ம்ம்......கடந்த காலங்களிலும் இது மாதிரி பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன்....அவ்வப்போது தென்றாலாய் புத்தம் புதிதாய் ஒரு தேவதை வந்து என் வருத்தம் நீக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து யாராயிருக்குமென்கிற படபடப்புடன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் நான்காமாண்டை கொண்டாடுகிற சாக்கில் சரக்கிருக்கும்வரை இலவசபுத்தகம் தருவதாக தெரிய வர, எதை தெரிந்தெடுப்பது என்கிற குழப்பத்தில் கண்னை மூடிக்கொண்டு எலிக்குட்டியை சொடுக்குவோமென முடிவெடுத்ததில் கீரைகள் என்கிற புத்தகம் வந்தது. மேலும் இந்த மாதிரியான புத்தகத்தை பெரும்பாலானோர் தெரிந்தெடுக்க மாட்டார்கள் என்பதால் நிச்சயமாய் எனக்கு புத்தகம் வரும் என நினைத்த மாதிரியே நேற்று வந்துவிட்டது. கிழக்குப் பதிப்பகத்திற்கு நன்றிகள்......புத்தகத்திற்கும்...விலைபட்டியலுக்கும்...

”பேனாவை வைத்து கொள்ளையடிக்க முடியுமா?...அதுவும் கோடி கோடியாய்.....முடியுமென நிரூபித்திருக்கிறார்கள்!....தமிழகத்தில்...” இது எங்கோ எதிலோ படித்தது, மற்றபடி எனக்கு யார் மேலும் பொறாமையெல்லாம் கிடையாதாக்கும்....ம்ம்ம்ம்ம்ம்