அப்பாவின் மகன் !

Saturday, June 20, 2009

இன்றைக்கு அப்பாக்களின் தினமாம், காலையில் கண்விழித்த போது கிடைத்த எச்சில் முத்தங்களும், வாழ்த்து அட்டைகளும் தந்த...... மகிழ்ச்சியை உள்வாங்குவதற்குள் அப்பாவின் நினைவு...

மதுரையில் அப்பா !....

கடந்த சில தினங்களாய் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, பெரிதாய் கவலைப்பட ஏதுமில்லையென்றாலும் இந்த முறை நிறையவே கவலைப்படுகிறேன்.....எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

எல்லோரைப்போலவும் நானும் அம்மா பையனாகவே இருந்ததினால் அம்மாவை தாண்டிய அல்லது அம்மாவின் ஊடாகவே அப்பாவை பார்த்திருக்கிறேனோவென்கிற நெருடல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு.மற்றவர்களை போன்றவரல்ல என் அப்பா...அவர் பிறந்த பிரசவத்தில் எனது பாட்டியார் தவறிப்போக, அம்மா இல்லாத பிள்ளையாய் பிறந்து, தனது ஆறாவது வயதில் தந்தையையும் இழந்து பெற்றோரின் அரவனைப்போ, அன்போ இல்லாது தன் அண்ணன்களின் பராமரிப்பில் அண்ணிகளின் கொடுங்கோலாட்சியில் தனது இளமையைத் தொலைத்த பரிதாபமான வரலாறுடையவர்.

அவரின் இளமைக்காலத்து அவலக் கதைகள் பலவும்தான் என்னை மிகப்பெரிய உயரங்களில் சாமன்யனாகவும், மிகத் தாழ்வான தருணங்களில் அதீத கம்பீரத்துடன் நிதானித்து நிற்கும் மன உறுதியை தந்திருக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனை இடைஞ்சல்கள், அவமதிப்புகள் மத்தியில் இரண்டு டிகிரிகள் முடித்து தனக்கென ஒரு வாழ்க்கையையும், உயரங்களையும் அமைத்துக் கொண்டவர். படிக்க வைத்த செலவு என்கிற வகையில் பூர்வீக சொத்துக்கள் அண்ணன்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மௌனமாய் கையெழுத்துப் போட்டுக்கொடுதுவிட்டு வந்தவர்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து அவர் எங்களோடு பெரிதாய் நெருங்கியிருந்ததாய் நினைவில்லை. அவரின் அறையில் எப்போதும் எதாகிலும் படித்துக் கொண்டிருப்பார்.அம்மாவின் மூலமே அப்பாவை அனுகமுடியும். அன்பை வெளிப்படையாக காட்டத் தெரியாத அப்பாவாகவே அவர் இருந்தார். ஆனால் எங்களை எதிர்கொள்ளூம் போது அப்பா கேட்கும் ஒரே வார்த்தை ”சாப்ட்டியா” என்பதாகவே இருக்கும். ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் தன் அண்ணிகளால் அவமதிக்கப்பட்ட அல்லது அனுமதியில்லாத அந்த சிறுவனின் ஏக்கத்தின் எதிரொலியான வார்த்தைகளாகவே அதை பின்னாளில் நான் புரிந்து கொண்டேன். இப்போதும் எனக்கு நெருக்கமானவர்களை பார்த்தவுடன் நான் தன்னிச்சையாக கேட்கும் முதல் கேள்வி “சாப்ட்டியா” என்பதாகத்தான் இருக்கும்.

அம்மா உண்மையில் அப்பாவை ஒரு குழந்தையை கவனிப்பதை போல கவனித்துக் கொண்டார். எங்களைவிட தங்கை அப்பாவுக்கு நெருக்கமாயிருந்தாள். அப்பாவின் மீதான ஏகபோக உரிமை தங்கைக்கிருந்தது. அப்பாவும் அதை அனுமதித்தார். அதன் மூலமாய் கிடைத்த சலுகைகள், பரிசுகள், கூடுதல் கவனிப்புகள் இதெல்லாம் பொறாமையாகி எங்களை அம்மாவின் அடிபொடிகளாக்கியது எனலாம்.

கல்லூரி நாட்களுக்குப் பின்னரே அப்பாவுடன் நெருங்க முடிந்தது. காலையில் அவருடன் வாக்கிங் போக ஆரம்பித்த பின்னரே அப்பாவின் ஃப்ளாஷ்பேக்குகளை எனக்கு சொல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மூத்தவன் என்பதாலோ என்னவோ என்னுடன் நெருக்கமாயிருக்க முயற்சித்தாரென நினைக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்வது, எதிர்கால திட்டங்கள் அல்லது அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் என் மீது திணிக்காமல் கோரிக்கையாக வைத்தார். இப்போது நான் அப்பாவின் மிகப்பெரிய ரசிகனாயிருந்தேன்.

ஒரு நாள் இரவு, "சாப்ட்டுட்டு என் ரூமுக்கு வா!" என்றார்......இந்த மாதிரி அவர் ரூமுக்கு அழைத்து எங்களிடம் பேசுவதில்லை. பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே அவர் பேசிய காட்சி இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

“உனக்கு கல்யாணம் பண்ணீடலாம்னு நானும் அம்மாவும் முடிவு பண்ணீருக்கோம்....என்ன சொல்றே !”

அதுக்குள்ள எதுக்கு, இன்னும் ஒரு வருசம் போகட்டும்....இது நான்

அம்மா உனக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கா...எனக்கு அதுல இஷ்டமில்லை, நீ என்ன நினைக்கறேங்கறதுதான் எனக்கு முக்கியம்....

யாரையாவது மனசுல வச்சிருக்கியா? அப்படி உனக்கு புடிச்சிருந்தா சொல்லு...அது யாரா இருந்தாலும் எனக்கு சரிதான், அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...அவசரமில்லை நல்லா யோசிச்சு சொல்லு...... உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.....

ஒரு மாதம் முன்னால் கேட்டிருந்தால் படக்கென அந்த பெண்ணை கை காட்டியிருப்பேன்....அப்போதுதான் ஒரு ச்ச்ச்சின்ன ஈகோ பிரச்சினையில் கோவத்தில் இருந்ததலால்....நீங்க பார்த்து என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதமென விட்டேத்தியாய் பதில் சொன்னேன். ஆனால் அந்த நிமிஷத்தில் மேசை விளக்கின் வெளிச்சத்தில் அப்பாவின் முகத்தில் தெரிந்த புன்னகை என் வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று.....

தங்கையின் திருமணத்தின் போது, நிறையவே செய்யவேண்டுமென ஆசைப்பட்டார், நானும் தம்பியும் தடையேதும் சொல்லவில்லை...அப்படியே செஞ்சிரலாம்னு சொல்ல, அம்மாவோ இப்பவே எல்லாத்தயும் செய்யனுமாவென தடைபோட, அந்த புள்ளையை கைக்குள்ளயே வச்சி வளர்த்துட்டேன், போற இடத்துல அது எதுக்காகவும் யாரையும் எதிர்பார்க்க கூடாது என அவர் கண்கலங்கியதை பார்த்த அம்மா, அவர் நினைத்ததை காட்டிலும் மேலும் அதிகமாய் செய்த போது அவர்களின் பரஸ்பர புரிதல்களின் ஆழம் உணர்ந்தோம்.

புகழ்ந்துகொண்டேயிருப்பது இந்த பதிவின் நோக்கமில்லை, நெகிழ்வான தருணஙக்ளை பதிந்து வைக்குமொறு முயற்சியே, .

நாங்கள் சிறுவர்களாயிருந்த போது அப்பா ஒரு ச்செயின் ஸ்மோக்கர் ஒரு நாளைக்கு 6-7 பாக்கெட்டுகளை காலிசெய்வார். அவரின் அறையே புகைமண்டலமாயிருக்கும். சிகரெட் மணம் இன்றைக்கும் எனக்கு அலர்ஜியாகிப் போனதில் அப்பாவிற்கு பங்குண்டு. எனது நட்புவட்டமனைத்தும் வளையம் வளையமாய் ஊதிக்கொண்டிருந்த போதும் நான் அதில் ஆர்வமில்லாமல் இருந்தது அப்பாவின் இந்த பழக்கம்தான். சிறுவயதில் அவரை நெருங்க முடியாமல் போனதற்கும் இதுதான் காரணமாயிருந்திருக்க முடியும். பின்னாளில் அம்மாவிற்கு ஒரு இதய அறுவை சிகிச்சையின் போது சிகரெட் பழக்கத்தை விடுவதாக வேண்டிக் கொண்டதனால் எல்லோரும் ஆச்சர்யபடும் வகையில் சுத்தமாய் அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்.

இப்படி நிறையவே எழுதலாம்தான்.....ம்ம்ம்ம்

இந்த வாரம் டிக்கெட் போடனும்...அப்பாவை பார்க்கனும்.

10 comments:

மங்கை said...

அம்மா அப்பாவின் அன்பு கிடைக்காமல் வளர்ந்த குழந்தைகள் வேறு மாதிரியாக வளரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக உளவியல் ஆய்வுகளும், வாதங்களும் இருப்பதை படித்திருக்கிறோம். அது அனைவருக்கு பொது அல்ல என்பதை அப்பா வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்.
அவரை புரிதலுடன் எதிர்கொள்ளும் அம்மாவையும் பாராட்டனும்.

இருவரும் நோய் நொடி இன்றி நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மங்கை said...

அப்பாக்களின் தினமாச்சே

எல்லா அப்பாக்களுக்கும் வாழ்த்து கொல்லிக்கிறேன்...:-))

மங்களூர் சிவா said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

மிக அருமையான பதிவு. உங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள்.

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

தமிழ் அமுதன் said...

இரண்டு முறை படித்தேன்! நீங்கள் உங்கள் தந்தை மீது வைத்துள்ள அன்பு,பக்தி கலந்த மரியாதையையும்! உங்கள் தந்தை உங்கள் மீது வைத்துள்ள, அக்கறை மிகுந்த கம்பீரமான அன்பினையும் உணர முடிகிறது!!

லக்கிலுக் said...

மகன்கள் அப்பாவை எப்படி எதிர்கொள்கிறோமென்பது சுவாரஸ்யமான முழுநீள நாவல் :-)

லக்கிலுக் said...

மகன்கள் அப்பாவை எப்படி எதிர்கொள்கிறோமென்பது சுவாரஸ்யமான முழுநீள நாவல் :-)

சிம்பா said...

ரொம்ப லேட் ஆ வந்திருக்கேன்... இருந்தாலும் பதிவை மூன்று, நான்கு முறை படித்தேன் குரு..

ரொம்ப பொறாமையா இருக்கு...

அப்போ நீங்களும் இப்படி தானா... இருந்தாலும் தந்தையர் தின வாழ்த்துக்கள்... எங்கள் குருவுக்கு உரு கொடுத்தவரை கேட்டதாக சொல்லவும்.

அன்புடன்.. அருண்......

தென்றல் said...

ம்ம்ம்ம்..."அடிபொலி!"

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படியான வாழ்வின் நெகிழ்வான தருணங்கள் எழுதி வைக்கத்தான் வேண்டும்..