கொலதெய்வம் நமீதாவிற்கு வீரவணக்கம்...

Tuesday, April 28, 2009


Namitha in Mini Dress in Vyabar - The top video clips of the week are here


சமீபத்தில் பாடலாசிரியர் தாமரைக்கு வீரவணக்கம் என சில பதிவுகளை பார்த்தேன். தமிழர்களின் உணர்வினை தூண்டியதால் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அந்த பதிவுகள் இருந்தன... அவர் தூண்டிய உணர்வினால் அங்கே குழுமியிருந்தவர்களும், இங்கே வலையுலகில் பலரும் சிலிர்த்துப் போனார்கள் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன் .

அப்படி என்னதான் பேசினாரென பார்த்தால் வழக்கமான பட்டிமன்ற பேச்சாளர்களின் தரத்திலான பேச்சாகவே எனக்கு பட்டது. இந்தியன் என்கிற இனமே இல்லையாம், இவரின் கடவுச்சீட்டில் நேஷனாலிட்டியில் தமிழன் என்று போட்டிருக்கிராறா அல்லது இந்தியன் என போட்டிருக்கிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நாலுவரி கவிதை...பலி...புலி என எதுகை மோனையாக பேசியதற்காவெல்லாம் உணர்ச்சி வசப்படமுடியாது. இவரை விட அண்ணன் டி.ஆர் அதிரடியாக எதுகை மோனையில் கவிதை சொல்லி கேட்டிருக்கோமாக்கும்.

துப்பாக்கி தூக்கிக் கொண்டு போவாராம்.....அவரை சுற்றியிருக்கும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் துயர்களை கண்டு ஒரு துடப்பத்தைக் கூட தூக்கியதாக அறியப்படாதவர் இலங்கைக்கு துப்பாக்கி தூக்கிக் கொண்டு போகப்போகிறாராம்.....ஹேய் யாருப்பா அது அதுக்குள்ள உணர்ச்சி வசப்படறது.....இன்னும் இருக்கு

ஜெயலலிதா அம்மாவாசை, கலைஞர் அம்மாவாசைக்கு அடுத்தநாளென்றால் இத்தனை வயதில் தமிழகத்திற்கு, தமிழினத்துக்கு வெளிச்சம் போட இவர் என்ன முயற்சித்தார் என்பதையாவது அந்த மேடையில் சொல்லியிருக்கலாமே!... யார் தடுத்தது அவரை?

மேடை கிடைத்த உற்சாகத்தில், கூட்டம் கும்மியடிக்கிற போதையில் இவர் பேசியதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிவுபோட்டு வீரவணக்கம் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இத்தகைய உணர்ச்சி வயப்பட்டு ஆராதனை செய்வது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்கிறது.இம்மாதிரியாய் காலங்காலமாய் மலிவான உணர்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதுதான் தமிழனின் துரதிர்ஷ்டம்.

இந்த வகையில் இவரை விடவும் தமிழர்களின் உணர்வினை பல மடங்கு தூண்டிய கொலதெய்வம் நமீதாவும் வீரவணக்கம் செலுத்த உகந்தவர் என்கிற கருத்தினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாங்கிய காசுக்கு வஞ்சமில்லாமல் உணர்வினை தூண்டிய ...தூண்டிக்கொண்டிருக்கும் நமீதாவுக்கு வீரவணக்கம்....

டிஸ்கி:- இந்த பதிவு இலங்கை தமிழரின் துயரத்தை நோக்கியதில்லை....அதை வைத்துக் கொண்டு இங்கே வலையுலகில் சீன் போடும் சில சிந்தனையாளர்களை நோக்கியதே....

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்...

தமிழீழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்.....

மரியாதைக்கு உரிய ஐயா,

நலம், நலமே விழைய பிரார்த்திக்கிறேன். தங்களின் தற்போதைய முகவரி தெரியாததால் இந்த கடிதத்தினை எனது வலைபதிவின் மூலமாக தங்களின் மேலான பார்வைக்கு வைக்கிறேன். இந்த கடிதத்தை இங்கே வலையுலகமெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். சமீபகாலமாக என் போன்ற சாமானிய தமிழனுக்கு, தமிழகத்திலும் சரி, வலையுலகத்திலும் சரி கொசுத்தொல்லையை விட மோசமாக தொல்லை தருபவர்கள் இந்த தமிழுணர்வாளர்கள்.இவர்களின் பேச்சையும் எழுத்தையும் கடந்து போகும் போது எனக்குள் குற்றவுணர்வு மேலோங்குகிறது. நான் தமிழனாய் பிறந்திருந்தாலும் அநியாயத்திற்கு இந்தியனாக இருக்கிறேனோவென்ற சந்தேகம் என்னை மிகவும் உறுத்தியதால் இது குறித்து மேலதிகமாய் சிந்தித்த போது எனக்குள் எழும்பிய சில சந்தேகங்களை இந்த கொசுத்தொல்லை ஆசாமிகளிடம் கேட்பதை காட்டிலும் பிரச்சினையின் நாயகனாகிய உங்களையே கேட்டிடலாமென இந்த கடிதத்தினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுக்கு நேரமிருந்தால் பின்வரும் எனது சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு பதில் தரவேண்டுகிறேன்.

  1. ஏசு வருகிறார்...வந்து விட்டார்...வந்து கொண்டேயிருக்கிறார் என்பது மாதிரியாக முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழீழம் வருகிறது...வந்து கொண்டிருக்கிறது...வந்து விட்டது என்று நீங்கள் சொன்னதை வாய்பிளந்து உளம் மகிழ்ந்து கேட்ட அப்பாவி ஈழத்துப் பொதுமகனுக்கு, அல்லது வேர்வை சிந்தி உழைத்த தங்கள் பணத்தை ஆயுதம் வாங்கிட அள்ளி அள்ளிக் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழனுக்கு நீங்கள் இது வரையில் நீங்கள் திரும்பக் கொடுத்தது என்ன?
  2. பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்றவர்களின் அனுசரனையும் ஆதரவு இல்லாமல் தமிழீழம் சமைக்க இயலாது என்கிற அடிபடை அரசியல் கூறை எங்கனம் மறந்தீர்கள்? உண்மையில் தமிழீழம் படைக்க நினைத்திருந்தால் மாவோ தீவிரவாதிகள் சீனாவிடம் ஆதரவு பெறுவதைப் போல நீங்கள் ஏன் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்ற அதிகார மய்யங்களோடு சுமூகமான உறவினை ஏற்படுத்திக் கொள்ள முனையவில்லை?
  3. ராஜீவ்காந்தியின் கொலைக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது கலைஞர் அந்த கூட்டணியில் இருந்தார், தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணன் வைக்கோவின் கட்சியினர் அமைச்சராக கூட இருந்தனர், அந்த சந்தர்ப்பத்தை ஏன் தாங்கள் பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை? ஐரோப்பிய நாடுகளின் அடிவருடியாகி அவர்கள் பின்னால் போனதன் மர்மம் என்ன? புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து பணம் கறக்கும் உத்தியாக அந்த நிலைப்பாட்டினை எடுத்தீர்களா?
  4. போரில் உங்கள் கை ஓங்கியிருந்த போது ஐரோப்பிய நாடுகளின் மேற்பார்வையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அதை சமயோசிதமாக பயன் படுத்திக் கொள்ளாதது யார் குற்றம்? இந்தியாவின் குற்றமா?
  5. ராஜபக்‌ஷே தேர்தலில் வெற்றிபெற்றால் அரசின் தீவிரத்தன்மை அதிகரிக்குமென தெரிந்தும் மென்மையான போக்கினை கடைபிடித்த ரணில் விக்கரமசிங்கேயை தோற்கடிக்க ஏன் முனைந்தீர்கள்?
  6. ”துன்பியல் நிகழ்வு” என்கிற வார்த்தையின் பின்னால் இத்தனை பெரிய வலியும் வேதனையும் இருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்திருந்தீர்களா? அதன் எதிர்வினையை தவிர்க்க என்ன முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தினீர்கள்?
  7. ராஜீவ் காந்தியை கொல்ல உங்களுக்கு எத்தனை நியாயமிருக்கிறதோ அத்தனைக்கு குறைவில்லா நியாயம் சோனியாவிற்கு உங்களை பழிதீர்ப்பதில் இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா?
  8. ஆண்ட்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் மாதிரியான ராஜ தந்திரிகள் இல்லாமல் போனதுதான் உங்களின் படுதோல்விக்கு காரணம் என நினைக்கிறீர்களா?
  9. “செய் அல்லது செத்துமடி” என இன்றைக்கு தமிழகத்தில் உங்களின் ஆதரவாளர்கள் தமிழக முதல்வரை ஏகத்துக்கு கேள்வி கேட்கின்றனரே, அந்த கேள்வி இப்போது உங்களுக்கும் பொருந்தும்தானே? உன்னால் முடியாவிட்டால் பதவியை தூக்கியெறிந்து விட்டு போய்விடு, ஜெயலலிதா வந்து தமிழீழம் வாங்கித்தருவார் என்பது மாதிரியாக கலைஞரை பார்த்து கேள்வியெழுப்பும் இந்த தமிழுணர்வாளர்கள் நாளைக்கு உங்களை பார்த்து இதே மாதிரியான கேள்வியை கேட்டால் என்ன செய்வீர்கள்?
  10. இன்றைக்கு உங்களின் ராணுவ கட்டமைப்பு முழுமையாக இலங்கை அரசினால் தகர்க்கப் பட்டுவிட்ட நிலையில், காடுகளுக்குள் பொதுமக்களை கேடயமாக நிறுத்திக் கொண்டு பதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிற இலங்கை அரசின் பரப்புரையினை அறிவீர்களா? அப்படிபட்ட ஒரு நிலையினை நீங்கள் இழிவாக கருதவில்லையா? அதை தவிர்க்க என்ன செய்ய போகிறீர்கள்?
  11. கருணா, ஜெயலலிதா இவர்களில் யார் நல்லவர்?, யாரை நம்பலாம்?
  12. மக்களின் நலனுக்காக இயக்கமா? அல்லது இயக்கத்திற்காக மக்களா? இத்தனை சாவுக்கும் இலங்கை அரசும், இந்தியாவும் மட்டும்தான் காரணமா?இத்தனை பேர் செத்துப் போனதில் உங்களின் பங்கென எதுவுமில்லை என நினைக்கிறீர்களா?
இன்னமும் ஒரு சில கேள்விகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் நேரடியாக யுத்தகளத்தில் செயல்படுவதாக வந்த செய்திகளின் காரணமாய் உங்களின் பொன்னான நேரத்தினை கருத்தில் கொண்டு இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறேன். எனது இந்த கடிதத்தில் எந்தவித உள்நோக்கமோ அரசியல் உள்குத்துகளோ இல்லையென்பதை உறுதிபட கூறிட விரும்புகிறேன். ஒரு சாமானிய இந்தியனின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடம் விடைபெறுகிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

யோசிக்க ஆரம்பித்திருக்கும் தமிழன்.




வெட்கம் கெட்ட பதிவர்கள்....

Thursday, April 23, 2009

சமீபத்தைய எனது பதிவொன்றின் தலைப்பு....”ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை”. இந்த பதிவு அநேகர்களுக்கு கோவத்தை வரவழைத்த பதிவு. ஈழத்துயரத்தை பதிந்து வைக்கிறேன் பேர்வழியென சுயவெளிச்சம் போடத்துடிக்கும் அற்பர்களை பற்றியதே அந்த பதிவு...

இன உணர்வை வெளிப்படுத்துவது குற்றமா என்கிற தொணியில் நண்பரொருவர் கூட பதிவிட்டிருந்தார். அதில் விளக்கமும் கூறியிருந்தேன். இன்றைக்கு சூடான இடுகையில் முதலில் இருக்கும்பதிவின் தலைப்பு “பிரபாகரன் கைது”...இதுவா இன உணர்வு?, இதுவா இனப்பற்று?

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் தங்களின் தேசியத்தலைவராய் வரித்துக் கொண்ட ஒரு மனிதனை...எது நடக்கக் கூடாது என இத்தனை பேர் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்களோ அந்த தகவலை எதன் அடிப்படையில் அந்த பதிவர் பதிவிட்டார்?

இவர் ஒரு உதாரணமே...இவர் மாதிரி எண்ணற்ற காக்காய்கள் இங்கே பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பதிவுலகம் அர்த்தமுள்ளதாய் தொடர வேண்டுமெனில் இவர்களை புறந்தள்ளுதல் அவசியம்.

"சற்றுமுன்" என்கிற ஒரு செய்தி தளம் ஒன்று பல பதிவர்களால் இனைந்து நடத்தப்பட்டது. செய்திகளை அதன் சூடு குறையாமல் உண்மைக்கு சற்றும் விலகாமல் தொகுத்தளித்தனர். அதே போல ஒரு முயற்சி தற்போதைக்கு தேவைப்படுகிறது. அக்கறையுள்ள பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்துயர் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான ஒரு வலைப்பதிவினை தொடங்கலாம்.

அம்மாதியான ஆக்கப்பூர்வமான ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையே இப்போதைய அவசியமான அவசியம்....வெறுமனே ஒப்பாரி வைக்கிறேன் பேர்வழியென சவ ஊர்வலத்தில் சம்பந்தமே இல்லாமல் குடிவெறியுடன் கூத்தடிக்கும் விளம்பர பிரியர்கள் தமிழ் வலையுலகத்திற்கு தேவையில்லை.....

ஒரு கார் விபத்தும், சில கதைகளும்...

Tuesday, April 21, 2009

ஆஸ்தான சோதிடர் மாதிரி எனக்கு ஒரு ஆன்லைன் சோதிடர் இங்க இருக்கார். அவர் இங்கே பதிவெழுதும் ஒரு பிரபலர். அவரை நான் எழுத்தாளர் என்றுதான் அழைப்பேன்.இனிய நண்பர்....இம்புட்டு சொல்லீட்டு அவர் பேரை சொல்லாம இருக்க கூடாதுல்ல...சரி நம்ம வழக்கப்படி பதிவின் கடைசியில அவரை தெரிஞ்சிக்கலாம்.

இனி மேட்டருக்கு வருவோம்....அவருக்கு ஜோதிடத்தில் பரிச்சயம் இருந்ததால், என் ஜாதகத்தை குடுத்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்...இந்த இடத்தில் மிக முக்கியமான வரலாற்று குறிப்பு ஒன்றை நினைவில் வையுங்கள். நான் பெரியாரின் ஒரே ஒரு போலி தொண்டன். பழுத்த நாத்திகவாதி,பொதுவுடமை(இதுக்கு என்னா அர்த்தம்?)கொள்கை பற்றாளன்.

அவரும் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு...ஏழரைச்சனிக்கே ஏழரைச்சனி பிடிச்சா எப்படியிருக்குமோ அப்படி மோசமா இருக்கு உங்கள் நேரம் அப்படீன்னு சொன்னார்...அடடா 'என்ன இது மதுரைக்கு வந்த சோதனை'ன்னு நினைச்சிட்டு இருந்தப்போ...சொல்லி வச்ச மாதிரி நம்ம பிஸினஸ் ஒன்னு புட்டுகிச்சி. அதிகமில்லை ஜெண்ட்டிமென் அண்ட் உமன்.....ச்ச்ச்சும்மா ஒரு 30 லட்சம்கிட்டே காணாம போச்சுன்னுட்டானுங்க.
ஆஹா ஜோசியம் ஒர்க் அவுட் ஆகுது போலன்னு அவர்கிட்டே திரும்ப கேட்டேன். மே மாசம் வரை ரொம்ப மோசமா இருக்கு ஜாக்கிரதை. விபத்து கூட ஆகும்னு ஒரு எக்ஸ்ட்ரா டோஸ் வேற குடுத்தார்.

ஒரு டாக்டர்கிட்ட பார்த்துட்டு இன்னொடு டாக்டர் கிட்டே செக்கண்ட் ஒப்பீனியன் வாங்குவோமே அது மாதிரி இன்னொரு இனைய நண்பர்...அவர் இவரைவிட எக்ஸ்பர்ட், அதாவது அவங்க அப்பா பெரிய்ய்ய்ய ஜோதிடர், இவர் பங்குசந்தையில கலக்கறவர். அவர்கிட்டே கேட்டேன். அவரும் எல்லாம் பார்த்துட்டு மொதல்ல சொன்னத விட மோசமா சொன்னார்.இவரோ ஒரு வருசம், ஒரு மாசம், பதினோரு நாளைக்கு நெம்பா கஸ்டமுனுட்டார்.சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துட மாட்டோமான்னு மனச தேத்திட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன்.

சின்ன வயசுல எல்லா பயபுள்ளயும் நான் டாக்டராவேன்...எஞ்ஜினியாராவேன்னு சொல்லிட்டு திரியற மாதிரி எனக்கும் எப்படியாச்சும் ப்ரைம் மினிஸ்டராய்டனும்னு கொள்ள ஆசை...ஆனா சுயேச்சையா நின்னுதான் அந்த பதவிக்கு போகனும்னு ஒரு பக்கா கண்டிசனோட வாழ்ந்துட்டு இருக்கேன்னு வச்சிக்கங்க.இதெல்லாம் நடக்குமான்னு கேக்க கூடாது . கலைஞர் தமிழன தலைவர்னா நம்பறீங்க, ஜெயலலிதா புரட்சி தலைவின்னா நம்பறீங்க....ஏன் நான் ஆவமுடியாதுன்னு நினைக்கறீங்க...நம்புங்கப்பா...ப்ளீஸ்....எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா...ஸோ...நம்புங்க..ஹி...ஹி...

இனி மேட்டருக்கு வருவம்...எலெக்‌ஷன்னு சொல்லீட்டாய்ங்க இப்ப விட்டா இன்னும் அஞ்சு வருசம் வெயிட் பண்ணனுமே...ன்னு மண்டைக்குள்ள மணியடிக்க எந்த தொகுதில நிக்கலாம்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். மதுரையில எப்படியும் அஞ்ஞாநெஞ்சன் நிப்பாரு, நம்மால அவர் வெற்றி வாய்ப்பு தவறிப் போய்டக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில நிப்பம்னு முடிவு பண்ணீட்டேன். சரி எல்லா அரசியல் வாதியும் போற மாதிரி நம்ம ஆன்லைன் சோதிடர்கிட்டே ஒரு வார்த்தை கேப்போம்னு கேட்டேன்...அவர் நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டார்.....

ஒரே ஒரு வார்த்தைதான் சொனனார்.....அடுத்த எலெக்‌ஷனுக்கு பார்த்துகிடுவம்னு முடிவுபண்ணி...ஸ்ரீபெரும்பதூர் தொகுதிய இந்த வாட்டி யாரோ ஒரு எமகாதகபயலுக்கு விட்டுகுடுத்துட்டேன்.என்ன சொன்னார்னு சொல்லவே இல்லையே....அவர் சொன்னது...உங்களுக்கு எவ்ளோவ் கெட்ட நேரம்ங்கறதுக்கு இதை விட வேற என்ன சாட்சி வேணும்...ம்ம்ம்ம்ம்....என்னத்தச் சொல்ல! , இந்தியா ஒரு இளம் எம்.பி..யை இந்த முறை நழுவவிட்டது.

இந்த காலகட்டத்துல நம்ம மற்ற தொழில்களும்...ஈ, காக்காய், குருவி எல்லாம் ஒட்டத் துவங்கிவிட்டது, எல்லா பயலும் ஃபேஷனா சொல்லிக்கற மாதிரி ரிஷசன் நம்மளையும் போட்டு தாக்கீருச்சி. ஆளாளுக்கு ஆள்குறைப்பு, சம்பள குறைப்புன்னு படம் காட்டிகிட்டு இருக்கறதால நாமளும் ஜோதில கலந்துக்குவம்னு ரொம்ப சேட்டை பண்ணீட்டு இருந்த நாலு வாட்ச்மேனையும், ரெண்டு ட்ரைவரையும் இதான் சாக்குன்னு அனுப்பீட்டு நாங்களும் ஆட்குறைப்பு பண்ணீருக்கோம்லன்னு சொல்லீட்டிருக்கேன்.

ரெண்டு கதை சொல்லியாச்சுல்ல....இன்னும் ஒரு கதையோட முடிச்சிர்றேன்...சில கதைகள்னு தலைப்பு வச்சா இப்படித்தான், எழுதற எனக்கும் கஷ்டம், படிக்கற உங்களுக்கும் கஷ்டம்...ஆனாலும் எனக்கு இப்படி எழுதற்துல ஒரு சுயநலம் இருக்கு...ஹி..ஹி...இந்த பதிவின் நீளத்தை பார்த்துட்டு என்னையும் ஒரு உண்மைதமிழன்னு ஒத்துக்குவீங்கள்ல...ஹி...ஹி...

ட்ராக் மாறுது...மேட்டருக்கு வருவோம்...இந்த ஜோதிட மேட்டர்ல இருந்து கார் ஓட்ட தடைன்னு சொல்லி ஒரு பெரிய இம்சையான வயசான தாத்தா ஒருத்தரை நமக்கு ட்ரைவரா போட்டுட்டாங்க. அவர மாதிரி ஒரு அதிபத்திரமான ட்ரைவரை இனி இந்த உலகம் தேடித்தான் கண்டு பிடிக்கனும்.ரோட்ட க்ராஸ் பண்ற ஈ, எறும்புக்கெல்லாம் வண்டிய நிறுத்தி ஓட்றவர்னா பார்த்துக்கங்க...என்னத்த சொல்ல நம்ம நேரம் அப்படி......

போன ஞாயித்துக்கிழமை நம்ம ஜூனியர்ஸ் எல்லாம் வெளில போகனும்னு சொன்னானுங்க, சரி வாங்கடான்னு நம்ம பாஸ் தலைமையில கெளம்பி போனோம். நாந்தான் ட்ரைவர் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.அன்னா நகர்ல சுத்தீட்டு, ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டு திரும்பும் போது மணி பத்தரை ஆய்டுச்சி....நகரை விட்டு வெளியே வந்துட்டு இருந்தேன்...எனக்கு முன்னால ஒரு டவுன் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்துல ஆளுங்களை இறக்கி விட்டுட்டு இருந்துச்சி...ஓவர் டேக் பண்ண இடம் இல்லாததால அந்த வண்டிக்கு பின்னால நின்னுட்டு இருந்தேன்.

முன்னால இருந்த பஸ் நகர ஆரம்பிக்கவும், நான் கெளம்பலாம்னு கியர் போட.....டமாஆஆஆஆஆல்...னு ஒரு சத்தம்...பின்னால ப்ரேக் பிடிககாம வந்த லாரி மோதினதுல வண்டி ஒரு நாலஞ்சு அடி உயரத்துக்கு பறந்து அப்படியே ஒரு லாங்க்ஜம்ப் ஒரு பத்தடி தள்ளி போய் விழுந்து...கியர் போடாததால ஒரு இருபது அடி ஓடி நின்னுச்சி...பின் சீட்டுல இருந்து ஜூனியர் பறந்து என்னை கடந்து போனதை பார்த்தேன்....தலை முடியை கொத்தாய் பிடித்து சுவற்றில் நங்கென்று அறைந்தார் போல ஸ்டீரிங் வீலில் போய் மோதினேன். நெற்றியிலும், அடிவயிற்றிலும் அடி....பொறி கலங்கி போவதன் அர்த்தம் புரிந்த கணமது....

அந்த நிலையில் மற்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதே பிரதானமாய் ஓடியது...யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாது என்கிற பரிதவிப்புடன் மற்றவர்களை தேடினேன்....மகள் பின்னால் இரண்டு சீட்டுக்கிடையில் கிடந்ததை பார்க்க முடிந்தது.பாஸ் முன்னாலே பறந்து வந்தவனை கேட்ச் பிடித்திருக்க வேண்டும்....இறுக்கி அனைத்தமாதிரி என்னை பார்த்தவாறு முன்னால் சரிந்திருந்தார்.ஒவ்வொருவராய் எழுந்திருக்க...யாருக்கும் பெரிதான காயமோ, ரத்தமோ இல்லையென்பதன் நிம்மதிக்கு ஈடாக அப்போதைக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லை எனக்கு.

அப்புறம்....கொலைவெறியுடன் லாரிக்காரனோடு சண்டைபிடித்தது....ஆட்களை வரவழைத்து லாரியை எங்கள் இடத்தில் சிறைபிடித்து வைத்துக் கொண்டு பஞ்சாயித்து பைசா வாங்கியதெல்லாம் தனி கதை.... அதையும் இப்பவே சொல்லீடவா? ஹலோ எங்க ஓடறீங்க...பதிவை முடிச்சிட்டேன்...கடைசி வரிய படிச்சிட்டு போங்க....ஹி..ஹி...

இந்த பதிவருக்கும்...மேலே சொன்ன ஆஸ்தான ஆன்லைன் சோதிடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நம்பிடுமாறு வேண்டுகிறேன்.

கருப்பு எம்.ஜி.ஆரும்....கற்பிழந்த பாடலும்....

Sunday, April 19, 2009



இந்த வீடியோவை கேளுங்கள்....(?)

ஆமாம் கேளுங்கள்....மிக பொறுமையாய் கேளுங்கள்....

ஆமா ! தெரியாமத்தான் கேக்குறேன்...இந்த தமிழ் உணர்வாளர்கள்...பற்றாளர்கள்....இனமான தமிழாழர்கள் இதையெதிர்த்தெல்லாம் பொங்கியெழுந்து போராட மாட்டாங்களா?

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை....ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்....எவ்வளவோ பார்த்துட்டோம்....இதையும் பார்த்துருவோம்.

நேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...ஹி..ஹி...

ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை?

Thursday, April 9, 2009

இந்த தலைப்பு இங்கே பலருக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ரென கோபத்தை வரவைக்கும்தான். இந்த மேட்டரை வைத்துக் கொண்டு எத்தனை சீன் போட்டார்கள் இந்த பதிவர்கள்....நினைத்தாலே புல்லரிக்கிறது. எனக்கு தெரிந்து ஈழத்துயர் குறித்து சகோதரி தூயா மற்றும் தமிழ்நதியின் பதிவுகளை தவிர்த்து பெரும்பான்மையான பதிவுகளில் ஒரு வித போலித்தனமே மிஞ்சியிருந்தது. தங்களின் இந்த போலித்தனத்தையும், விளம்பரவெறியையும் இன உணர்வு போர்வைக்குள் இருத்திக்கொண்ட அவலத்தினை பொறுக்கவியலாமல் கேள்வி எழுப்பிய சிலரும் சோனியாவின் அடிவருடியாக, பார்ப்பன குஞ்சாக பட்டம் சூட்டப்பட்டது இந்த கேலிக்கூத்தின் உச்சம்.

தீக்குளித்து செத்துப்போனவர்களின் படங்களை தங்கள் பதிவில் போட்டுக்கொள்ள இவர்கள் காட்டிய ஆர்வத்தில் விளம்பரப்பிரியமே மேலோங்கியிருந்தது என்றால் மிகையில்லை. நான் கூட இந்த இன உணர்வாளர்கள் தங்களால் ஆன அளவு நிதியெதுவும் திரட்டி தற்கொலையாளர்கள் கைவிட்டுப் போன அவர்தம் குடும்பத்தார்க்கு வழங்குவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இதில் இன்னொரு வகை பதிவர்கள்....ஈழத்தின் உண்மையான கள நிலவரம் எதுவும் தெரியாமல் தமிழ்நெட் போன்ற தளங்களின் செய்திகளை வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு உண்மைக்கு சற்றும் நெருக்கமில்லாத செய்திகளை ஊதிப்பெருக்கி பதிவாக்கியதை கேலிக்கூத்தென்பதா இல்லை வஞ்சப்புகழ்ச்சியென்பதா?

இடது சாரி பதிவர்களாய் காட்டிக்கொள்வதில் சிலருக்கு எப்போதுமே அலாதிபிரியம்.....இந்த கொள்கை குஞ்சுகள் ரிலையன்ஸ் நம்மூரில் கடை பரப்பியபோது காட்டிய ஆவேசத்தை பார்த்து நான் ரொம்பவே சந்தோசபட்டேன்....எகிறி குதித்து அம்பானியின் குமட்டில் குத்திவிடுவார்கள் என்றெல்லாம் கூட நம்பினேன்.....என்னவாயிற்று?..... இந்த வறட்டுக் கூச்சல் ஆசாமிகளுக்கு ஈழப்பிரச்சினை பார்த்தவுடன் தேன் குடித்த நரியாய் தங்கள் சாமர்த்தியங்களையெல்லாம் திரட்டி உருட்டி மத்திய மாநில அதிகார மய்யங்களை குறி வைத்தெறிந்து கூத்தாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த செம்மறியாட்டு மந்தையில் சில கட்சி அபிமானிகளும் தங்கள் கட்சியை விமர்சிக்கிறேன் பேர்வழியென மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொண்டது தமாஷான தமாஷ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் வேதனைகளை பதிவில் வடிப்பதற்க்கும், இங்கே எல்லாவிதமான சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு நாங்களும் வேதனைப்படுகிறோமாக்கும் என்பதை காட்டிட பதிவிடுவதற்க்கும் உணர்வு ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.அவர்களின் வலி நிஜமானது...இழப்புகள் ஈடு செய்ய இயலாதது. அவர்களின் ஆத்திரத்தையும், இயலாமையின் கொதிப்பையும், எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்

இவர்களுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது....இன உணர்வு என்பீர்கள்....அதெல்லாம் இல்லை....இல்லவே இல்லை...இவர்கள் அனைவரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்...அதுதான் இவர்களிடத்தே உள்ள ஒற்றுமை. திரு,பிரபாகரனாகட்டும், ராஜபக்சேயாகட்டும், சோனியாவாகட்டும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எடுத்தது போல சகட்டும் மேனிக்கு எழுதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனம்தான் இவர்களின் ஒற்றுமை.

அநேகமாய் எல்லா சாவு வீடுகளிளும் காணக்கிடைக்கும் ஒரு காட்சி....வீட்டின் வாசல்படி வரை சிரித்துப் பேசிக்கொண்டு வருவார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே...கண்ணீர் தேக்கி பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைப்பதும், வீட்டை விட்டு வெளியே வரும்போது எதுவும் நடக்காதது போல கெக்கே பிக்கேவென சிரித்துக் கொண்டு செல்வதை பார்க்க இயலும். அது கூட இன உணர்வுதான்....அத்தகைய இன உணர்வுதான் பதிவுலகில் பெரும்பான்மையாக காண முடிகிறது. இதுவா இத்தருணத்தின் தேவை. இதையா ஈழச்சகோதரன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

இன்றைக்கு ஈழத்தமிழனின் உடனடித் எதிர்பார்ப்பு தனி தமிழ் ஈழமோ, பேச்சுவார்த்தையோ அல்ல.....உயிருக்கு உத்திரவாதம், உடமைகளுக்கு பாதுகாப்பு...அடுத்த வேளை உணவு. இதுதான் இன்றைய நிதர்சனம், இந்த உத்திரவாதத்தை பெறுவதுதான் இந்த போராட்டங்களின் இலக்காய் இருக்கவேண்டும். ஏனெனில் விடுதலை புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டிய சூழலில், தங்களை நம்பியிருந்த அப்பாவிகளை எங்கேயிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும். எனக்குத் தெரிந்து எவரும் இதை முன்வைத்து பதிவிடவோ, போராடவோ முனையவில்லை.

ஈழப்பிரச்சினை குறித்து விவாதிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்...எரிகிறவீட்டில் பிடுங்கியது வரையில் ஆதாயமென்கிற மாதிரி, ஒரு சமூகம் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணர்வாளன் என்கிற போர்வையில் விளம்பரம் தேடிய...தேடிக்கொண்டிருக்கின்ற பதிவர்களை பற்றியதே.....இந்த பதிவின் தலைப்பும் அத்தகைய மகா நடிகர்களை நோக்கியதே !

தாய்மையே போற்றி....

Tuesday, April 7, 2009



இவள் எனக்கு
தாயாய்... தமிழாய்...
தகையாய்...தருவாய்...உருவாய்
காட்டப்பட்டவள்...

பெரிதான எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாததால்
இதுவரையில் எனக்கு ஏமாற்றங்களில்லை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளென
இன்றைக்கும் நம்புகிறேன்.

இஸ்லாமிய நண்பனின் திருமணத்தின் போது
அவன் தாய் இரண்டு பத்திரிக்கைகளை கொடுத்து
இதை மீனாட்சிக்கு வச்சிட்டு ஒன்னை எடுத்துட்டு வர்றியா?
என கேட்டபோதுதான் இவளின் எல்லைகள் எனக்கு புரிந்தது.

மதுரைக்கு இவள்தான் எல்லாமே!
இவளின்றி எதுவும் அசையாது என சொல்லிக் கொண்டே
எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு அசைத்துக் கொண்டிருக்கும்
புண்ணியவான்கள் நாங்கள்....

இன்றைக்கு அன்னைக்கு குடமுழுக்கு
நிஜமாகவே இதயம் இனிக்கிறது
கண்கள் பனிக்கிறது...

இத்தனை வருடத்தில் உன்னிடத்தில் அன்பைத் தவிர
வேறெதையும் கேட்காதவன்
இந்த நாளில் கேட்கிறேன்....

ஈழத்தில் அமைதி தா....

தருவாயென்கிற நம்பிக்கையுடன்
பணிகிறேன் உன் பாதம்....
தாயே போற்றி
தமிழே போற்றி
தகையே போற்றி

-யட்சன்