சுப்ரமணியபுரம்...சமீபத்தைய தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கும் படம். இன்னொரு மதுரைக்காரன் ஜெயித்ததற்கான தற்பெருமை, தொடர்ச்சியாய் மதுரையின் கதைகள் தமிழர்களின் உணர்வுகளின் நீள அகலங்களில் ஊடுறுவுவதை காண்பதில் ஒரு பெருமிதம்..இதையெல்லாம் சொல்வதற்காய் இந்த பதிவு இல்லை.
கண்கள் இரண்டால்...இந்த பாடலும், அதில் அடுக்கப்படும் சம்பவங்களும், அச்சுஅசலாய் பிரதியெடுக்கப்பட்ட என்பதுகளின் சூழலும்...இது எனக்குள் கிளறிய நினைவுகளை சேகரித்து வைக்கவே இந்த பதிவு....
இளையராஜாவை நினைவுபடுத்தும் இசைக்கோர்வை, அன்றைய அலைகள் ஓய்வதில்லை பாடல்களையொத்த வரிகள்...
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...
அது எனக்கு பள்ளிக்கூட வயது, பெல்பாட்டம் பேண்ட் போடவேண்டுமென வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் நினைவுக்கு வ்ருகிறது.ஒரு தீபாவளிக்கு கீழே ஜிப் வைத்த பெல்பாட்டம் கிடைத்தபோது அடைந்த களங்கமில்லாத சந்தோஷத்தை சமீபத்தில் எப்பொழுதும் நான் பெறவில்லை என்றே நினைக்கிறேன்....
இந்த பட ஹீரோவைப்போல, பரட்டைத்தலையும், பத்துநாள் தாடியுமாய் நான் பார்த்த பல அண்ணன்மார்கள் இப்போது அய்ம்பதுகளில்....தேய்ந்து போன கார் டயர்களையே நினைவுபடுத்துகின்றனர்.
குறுகுறுவென திருட்டுப்பார்வையும், மெலிதான கோபத்துடன், ”நாங்களும் இருக்கோமாக்கும்” என்பதான முறைப்பும்...பொழச்சிப்போடாங்கிற மாதிரியான மெலிதான முறுவலும்....இன்ன பிற கவிதையான விழிமொழிகளுடன் வீதிக்கொரு கதாநாயகி இருந்தாள்...இன்னமும் இருக்கத்தான் செய்கிறாள்.வாழ்க்கையின் வேகத்தில் நான்தான் அதையெல்லாம் மறந்துவிட்டேனோ என்பது மாதிரியான உணர்வுகளை தந்த பாடல் இது.
இந்த கதாநாயகன்...எப்படி அச்சுஅசலாய் நம்மை மாதிரியே பல்லைகாட்டுகிறான் என்பதும், இன்னொரு ஆச்சர்யம். அந்த சமயத்தில் எனக்கு தெரிந்த பயல்கள் பலரும், ஏன் என்னையும் சேர்த்துதான்...விழிகளின் அங்கீகாரம் கிடைத்த கணத்தில் பற்பசை விளம்பரக்காரனைப் போல இளித்திருக்கிறோம்...அதை அந்த கதாநாயகிகளும் ரசிக்கத்தான் செய்தார்கள்.
மதுரையின் மருத்துவக்கல்லூரி வளாகம், அவுட்போஸ்ட் பஸ்ஸாடாப், மிஷன் ஹாஸ்பிடல் பஸ்ஸ்டாப் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது...மூன்று ஹீரோயின்களை சமாளித்ததை இப்போது நினைத்தால் ஆச்சர்யமான ஆச்சர்யம்.
இன்றைக்கு எல்லாம் தொலைத்து,மறந்து ஏதோ சமீபத்தில் காலிசெய்யப்பட்ட வீட்டிற்குள் நிலவும் வெறுமையான உணர்வுடன் இந்த பதிவினை முடிக்கிறேன்
3 comments:
காலி செய்யப்பட்ட வீடா.. வீட்டுக்குப்போய் சொல்லுங்க காலி பண்ணுவாங்க..
வேர்ட் வெரிபேகஷன் ?!!
கண்டுபுடிச்சிட்டீங்களே ஆத்தா...
ஹி..ஹி...ஆனாலும் நீங்க நெம்ப ஷார்ப் தாயே!
வூட்டுக்காரம்மா இந்த பக்கமெல்லாம் வர்றதில்லைங்ற தைரியத்துலதான் நெறய உண்மைய இங்கன கொட்டிவைக்கிறேன்.
என்னிக்காவது சிக்கினா அன்னிக்கு இருக்கு ஆப்பு...ஹி..ஹி..ம்ம்ம்ம்
Post a Comment