போதும் நிறுத்திக்குவோம்....!

Tuesday, July 28, 2009

அநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....

ஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த காலங்களில் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறேன். எழுதியதை படிக்கும் போது ஒரு நேர்கோடான கர்வமும், மெல்லிசான திமிரும் எனக்கு்ள் இழையோடியதை ரசித்திருக்கிறேன்.

பிடித்தது எழுதினேன்..இப்போது அத்தனை பிடிப்பில்லை....

கடந்த ஆண்டுகளில் செய்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டிலும் அத்தனை ஆர்வமில்லை...

சிலர் பிரயோசனமாயிருக்கிறது என கருதுவதால் எனது வர்த்தக பதிவுகளை மட்டும் தொடர்ச்சியாக இயக்குவதாயும், தனிப்பட்ட பதிவுகளை இத்துடன் நிறுத்திக்கொள்வதாயும் முடிவெடுத்திருக்கிறேன்.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களை இனி அனுமதிக்க வேண்டாம். அவை என்னுடையதில்லை.

இந்த முடிவுக்கு பின்னால் வருத்தமெல்லாம் இல்லை...அயற்சியே...

என்றும் அன்புடன்..

-யட்சன்



பதிப்பிக்க மறந்து போன பதிவு...

Saturday, July 11, 2009

போன மாதத்தில் ஏதோவொரு நாளில் எழுதியது, பதிப்பிக்க மறந்து போன பதிவு இது...திருத்தமெதுவும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கிறேன்....சோம்பேறித்தனம்!

இனி பதிவு...


என்னிடம் இரண்டு இனைய தொடர்புகள் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல இரண்டுமே செயலிழந்து விட திருவிழா கூட்டத்தில் தொலைந்த சிறுவனை போலாகிவிட்டது என் நிலமை. இனையமில்லாத காலத்தில் வேறு சில உருப்படியான காரியங்களை செய்யலாமென நினைத்து சிலவற்றை முடிக்கவும் பலதை மேலும் குளறுபடியாக்கியதையும் இந்த இடத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

கல்கி, சாண்டில்யன்,சுஜாதா செத்துப் போனதின் பின்னால் அவர்களின் இடத்தினை அல்லது பாணியினை நிரப்ப யாரும் இதுவரை முயற்சிக்கவில்லையென நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி....வெறும் டயரி குறிப்புகள் மாதிரி பதிவெழுதுவதை காட்டிலும் தீவிரமாய் ஒரு எழுத்தாளரின் தேர்ச்சியுடன் பதிவெழுத வேண்டுமென்கிற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எனவே இனி என் பதிவுகளுக்கு வருவதை பற்றி மறுபரிசீலனை செய்ய ஆரம்பியுங்கள்...சிகரெட் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை மாதிரியானதே முந்தைய வரி....

சமீபத்தில் படித்த ஒன்று அடிக்கடி மண்டைக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது....இதன் சாத்தியம் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டலாம் அல்லது தனியே பதிவு போட்டு தங்களின் புத்திசாலித்தனத்தை காட்டலாம்.

.....பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இந்த பதிவினை நீங்கள் படிக்கும் இந்த நிமிடம் வரையில் அதே அளவு அணுக்கள்தான் இருக்கிறதாம். புதிதாய் எதுவும் தோன்றவில்லையாம், அல்லது இனியும் தோன்றபோவதில்லையாம். இந்த அணுக்களின் கூட்டணு தொடர்கள்தான் மாறி மாறி வேறு வேறு உருவங்களாய் அல்லது உயிர்களாய் மாறுகிறதாம்....

...அதாவது ஒரு அணுவின் வாழ் நாள் சற்றேறக்குறைய 100000000000000000000000000000000000 வருஷங்களாம்....ஆக, என்றைக்கோ அழிந்து போன டைனசோரிலிருந்து முந்தா நாள் செத்துப்போன இலங்கை தமிழன் வரையில் யாருக்கும் அழிவில்லை.இவர்களின் அணுக்கள் மறு சுழற்சியடைந்து தாவரமாகவோ, தனிமமாகவோ அல்லது நாளை உங்களின் பேரப்பிள்ளையாகவோ பிறப்பெடுக்கும் சாத்தியங்களை மனதில் கொள்ளுங்கள்.

ப்ரபஞ்சம் என்றவுடன் "Big Bang Theory" நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இதுபற்றி தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. இதையெல்லாம் ச்சின்ன ச்சின்ன வரிகளில் எளிமையாய் பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாமென தோணுகிறது. சிலவருடங்களுக்கு முன்னால் வரை எனக்கும் இதுகுறித்து பெரிதாய் எதுவும் தெரியாதுதான். இப்போது மட்டும் என்னவாக்கும் என கேட்டீர்களேயானால் அரைகுறையாய் அதுகுறித்து ஒரு பதிவு போட நான் ரெடி...புத்திசாலியான நீங்கள் கேட்கமாட்டீர்களென்கிற நம்பிக்கையிருக்கிறது.....

தேவி ஸ்ரீ ப்ரசாத், தெலுங்கு சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர்.இவரது தெலுங்கு மெட்டுக்கள் மொழிமாற்றி படங்கள் மூலம் நம் காதுகளுக்கு வந்து கொண்டிருந்தது. தசாவதாரம் படத்தின் பிண்ணனி இசை கூட இவருடையதுதான். இப்போது நேரடியாக கந்தசாமி படத்தின் மூலம் தமிழில் தரையிறங்கியிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, பாடல்கள் சூப்பர் ஹிட்.

தியாகராஜ பாகவதருக்குப் பின்னால் எல்லா பாடல்களையும் படத்தின் நாயகன் விக்ரமே பாடியிருக்கிறார். ரொம்பவும் மெனக்கெட்டு எஸ்.பி.பி மாதிரி பாட முயற்சித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கேட்கவும் நன்றாகத்தானிருக்கிறது.....ஆனால் என்னுடைய ஃபேவரைட் எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமியில் உடன் பாடியிருக்கும் சுசித்ராவின் குரல்தான். எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் பின்னால் தமிழில் ஒரு வயாக்ரா குரல் ..... எஃப்.எம் தொகுப்பாளராய் அவர் பேசுவதை கேட்கத்தான் எரிச்சலாயிருக்கிறது. தவளை கத்துவது போல பேசுகிறார். பேசாமல் முழு நேர பாடகியானால் சந்தோஷப்படுவேன்.

தேவி ஸ்ரீ ப்ரசாத் தெலுங்குகாரராயிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தானாம்....தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் உறவினர் என்பதால் இவரின் திரையுலக பிரவேசம் எளிதாய் அமைந்திருந்தாலும் தன் திறமையால் தனது இடத்தை தக்கவைத்திருக்கிறார் இந்த இளைஞர். தோல் வாத்திய கருவிகளையும் அதன் தாளக்கட்டுகளையும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது என்னுடைய அவதானிப்பு.

நமீதாவிற்கு வயதாகிக் கொண்டே போகிறது, அன்மையில் ஒரு பாடல் காட்சியில் அவரின் நடன அசைவுகளை பார்க்க வருத்தமாயிருந்தது....குலுக்குவதையெல்லாம் ஆடுகிற இலக்கணத்துக்குள் கொண்டு வரமுடியாதில்லையா......ம்ம்ம்ம்ம்......கடந்த காலங்களிலும் இது மாதிரி பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன்....அவ்வப்போது தென்றாலாய் புத்தம் புதிதாய் ஒரு தேவதை வந்து என் வருத்தம் நீக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து யாராயிருக்குமென்கிற படபடப்புடன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் நான்காமாண்டை கொண்டாடுகிற சாக்கில் சரக்கிருக்கும்வரை இலவசபுத்தகம் தருவதாக தெரிய வர, எதை தெரிந்தெடுப்பது என்கிற குழப்பத்தில் கண்னை மூடிக்கொண்டு எலிக்குட்டியை சொடுக்குவோமென முடிவெடுத்ததில் கீரைகள் என்கிற புத்தகம் வந்தது. மேலும் இந்த மாதிரியான புத்தகத்தை பெரும்பாலானோர் தெரிந்தெடுக்க மாட்டார்கள் என்பதால் நிச்சயமாய் எனக்கு புத்தகம் வரும் என நினைத்த மாதிரியே நேற்று வந்துவிட்டது. கிழக்குப் பதிப்பகத்திற்கு நன்றிகள்......புத்தகத்திற்கும்...விலைபட்டியலுக்கும்...

”பேனாவை வைத்து கொள்ளையடிக்க முடியுமா?...அதுவும் கோடி கோடியாய்.....முடியுமென நிரூபித்திருக்கிறார்கள்!....தமிழகத்தில்...” இது எங்கோ எதிலோ படித்தது, மற்றபடி எனக்கு யார் மேலும் பொறாமையெல்லாம் கிடையாதாக்கும்....ம்ம்ம்ம்ம்ம்






அப்பாவின் மகன் !

Saturday, June 20, 2009

இன்றைக்கு அப்பாக்களின் தினமாம், காலையில் கண்விழித்த போது கிடைத்த எச்சில் முத்தங்களும், வாழ்த்து அட்டைகளும் தந்த...... மகிழ்ச்சியை உள்வாங்குவதற்குள் அப்பாவின் நினைவு...

மதுரையில் அப்பா !....

கடந்த சில தினங்களாய் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை, பெரிதாய் கவலைப்பட ஏதுமில்லையென்றாலும் இந்த முறை நிறையவே கவலைப்படுகிறேன்.....எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

எல்லோரைப்போலவும் நானும் அம்மா பையனாகவே இருந்ததினால் அம்மாவை தாண்டிய அல்லது அம்மாவின் ஊடாகவே அப்பாவை பார்த்திருக்கிறேனோவென்கிற நெருடல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு.மற்றவர்களை போன்றவரல்ல என் அப்பா...அவர் பிறந்த பிரசவத்தில் எனது பாட்டியார் தவறிப்போக, அம்மா இல்லாத பிள்ளையாய் பிறந்து, தனது ஆறாவது வயதில் தந்தையையும் இழந்து பெற்றோரின் அரவனைப்போ, அன்போ இல்லாது தன் அண்ணன்களின் பராமரிப்பில் அண்ணிகளின் கொடுங்கோலாட்சியில் தனது இளமையைத் தொலைத்த பரிதாபமான வரலாறுடையவர்.

அவரின் இளமைக்காலத்து அவலக் கதைகள் பலவும்தான் என்னை மிகப்பெரிய உயரங்களில் சாமன்யனாகவும், மிகத் தாழ்வான தருணங்களில் அதீத கம்பீரத்துடன் நிதானித்து நிற்கும் மன உறுதியை தந்திருக்கிறது என்றால் மிகையில்லை. அத்தனை இடைஞ்சல்கள், அவமதிப்புகள் மத்தியில் இரண்டு டிகிரிகள் முடித்து தனக்கென ஒரு வாழ்க்கையையும், உயரங்களையும் அமைத்துக் கொண்டவர். படிக்க வைத்த செலவு என்கிற வகையில் பூர்வீக சொத்துக்கள் அண்ணன்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மௌனமாய் கையெழுத்துப் போட்டுக்கொடுதுவிட்டு வந்தவர்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து அவர் எங்களோடு பெரிதாய் நெருங்கியிருந்ததாய் நினைவில்லை. அவரின் அறையில் எப்போதும் எதாகிலும் படித்துக் கொண்டிருப்பார்.அம்மாவின் மூலமே அப்பாவை அனுகமுடியும். அன்பை வெளிப்படையாக காட்டத் தெரியாத அப்பாவாகவே அவர் இருந்தார். ஆனால் எங்களை எதிர்கொள்ளூம் போது அப்பா கேட்கும் ஒரே வார்த்தை ”சாப்ட்டியா” என்பதாகவே இருக்கும். ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் தன் அண்ணிகளால் அவமதிக்கப்பட்ட அல்லது அனுமதியில்லாத அந்த சிறுவனின் ஏக்கத்தின் எதிரொலியான வார்த்தைகளாகவே அதை பின்னாளில் நான் புரிந்து கொண்டேன். இப்போதும் எனக்கு நெருக்கமானவர்களை பார்த்தவுடன் நான் தன்னிச்சையாக கேட்கும் முதல் கேள்வி “சாப்ட்டியா” என்பதாகத்தான் இருக்கும்.

அம்மா உண்மையில் அப்பாவை ஒரு குழந்தையை கவனிப்பதை போல கவனித்துக் கொண்டார். எங்களைவிட தங்கை அப்பாவுக்கு நெருக்கமாயிருந்தாள். அப்பாவின் மீதான ஏகபோக உரிமை தங்கைக்கிருந்தது. அப்பாவும் அதை அனுமதித்தார். அதன் மூலமாய் கிடைத்த சலுகைகள், பரிசுகள், கூடுதல் கவனிப்புகள் இதெல்லாம் பொறாமையாகி எங்களை அம்மாவின் அடிபொடிகளாக்கியது எனலாம்.

கல்லூரி நாட்களுக்குப் பின்னரே அப்பாவுடன் நெருங்க முடிந்தது. காலையில் அவருடன் வாக்கிங் போக ஆரம்பித்த பின்னரே அப்பாவின் ஃப்ளாஷ்பேக்குகளை எனக்கு சொல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மூத்தவன் என்பதாலோ என்னவோ என்னுடன் நெருக்கமாயிருக்க முயற்சித்தாரென நினைக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்வது, எதிர்கால திட்டங்கள் அல்லது அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் என் மீது திணிக்காமல் கோரிக்கையாக வைத்தார். இப்போது நான் அப்பாவின் மிகப்பெரிய ரசிகனாயிருந்தேன்.

ஒரு நாள் இரவு, "சாப்ட்டுட்டு என் ரூமுக்கு வா!" என்றார்......இந்த மாதிரி அவர் ரூமுக்கு அழைத்து எங்களிடம் பேசுவதில்லை. பேப்பர் வெயிட்டை உருட்டிக்கொண்டே அவர் பேசிய காட்சி இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

“உனக்கு கல்யாணம் பண்ணீடலாம்னு நானும் அம்மாவும் முடிவு பண்ணீருக்கோம்....என்ன சொல்றே !”

அதுக்குள்ள எதுக்கு, இன்னும் ஒரு வருசம் போகட்டும்....இது நான்

அம்மா உனக்கு பொண்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கா...எனக்கு அதுல இஷ்டமில்லை, நீ என்ன நினைக்கறேங்கறதுதான் எனக்கு முக்கியம்....

யாரையாவது மனசுல வச்சிருக்கியா? அப்படி உனக்கு புடிச்சிருந்தா சொல்லு...அது யாரா இருந்தாலும் எனக்கு சரிதான், அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...அவசரமில்லை நல்லா யோசிச்சு சொல்லு...... உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.....

ஒரு மாதம் முன்னால் கேட்டிருந்தால் படக்கென அந்த பெண்ணை கை காட்டியிருப்பேன்....அப்போதுதான் ஒரு ச்ச்ச்சின்ன ஈகோ பிரச்சினையில் கோவத்தில் இருந்ததலால்....நீங்க பார்த்து என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதமென விட்டேத்தியாய் பதில் சொன்னேன். ஆனால் அந்த நிமிஷத்தில் மேசை விளக்கின் வெளிச்சத்தில் அப்பாவின் முகத்தில் தெரிந்த புன்னகை என் வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று.....

தங்கையின் திருமணத்தின் போது, நிறையவே செய்யவேண்டுமென ஆசைப்பட்டார், நானும் தம்பியும் தடையேதும் சொல்லவில்லை...அப்படியே செஞ்சிரலாம்னு சொல்ல, அம்மாவோ இப்பவே எல்லாத்தயும் செய்யனுமாவென தடைபோட, அந்த புள்ளையை கைக்குள்ளயே வச்சி வளர்த்துட்டேன், போற இடத்துல அது எதுக்காகவும் யாரையும் எதிர்பார்க்க கூடாது என அவர் கண்கலங்கியதை பார்த்த அம்மா, அவர் நினைத்ததை காட்டிலும் மேலும் அதிகமாய் செய்த போது அவர்களின் பரஸ்பர புரிதல்களின் ஆழம் உணர்ந்தோம்.

புகழ்ந்துகொண்டேயிருப்பது இந்த பதிவின் நோக்கமில்லை, நெகிழ்வான தருணஙக்ளை பதிந்து வைக்குமொறு முயற்சியே, .

நாங்கள் சிறுவர்களாயிருந்த போது அப்பா ஒரு ச்செயின் ஸ்மோக்கர் ஒரு நாளைக்கு 6-7 பாக்கெட்டுகளை காலிசெய்வார். அவரின் அறையே புகைமண்டலமாயிருக்கும். சிகரெட் மணம் இன்றைக்கும் எனக்கு அலர்ஜியாகிப் போனதில் அப்பாவிற்கு பங்குண்டு. எனது நட்புவட்டமனைத்தும் வளையம் வளையமாய் ஊதிக்கொண்டிருந்த போதும் நான் அதில் ஆர்வமில்லாமல் இருந்தது அப்பாவின் இந்த பழக்கம்தான். சிறுவயதில் அவரை நெருங்க முடியாமல் போனதற்கும் இதுதான் காரணமாயிருந்திருக்க முடியும். பின்னாளில் அம்மாவிற்கு ஒரு இதய அறுவை சிகிச்சையின் போது சிகரெட் பழக்கத்தை விடுவதாக வேண்டிக் கொண்டதனால் எல்லோரும் ஆச்சர்யபடும் வகையில் சுத்தமாய் அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்.

இப்படி நிறையவே எழுதலாம்தான்.....ம்ம்ம்ம்

இந்த வாரம் டிக்கெட் போடனும்...அப்பாவை பார்க்கனும்.

நன்றி நண்பர்களே...!

Wednesday, June 17, 2009

என்னுடைய இரண்டு இனைய இனைப்புகளும் எதிர்பாராதவிதமாய் செயலிழந்து விட கடந்த இரண்டு வாரங்களாய் எனது பதிவுத் தொல்லையிலிருந்து தப்பித்திருந்தீர்கள் தமிழ்மணம் என்னை தள்ளி விட்ட பின்னர் இனி நிறைய தொடர்ந்து எழுதிட வேண்டுமென நினைத்திருந்தேன்....ம்ம்ம்

முந்தைய பதிவில் எனக்கு ஆதரவாய் நின்ற அன்புள்ளங்களுக்கு நன்றி....லக்கிக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. நான் இதுவ்ரை அவரை நேரில் சந்தித்ததில்லை. அவ்ர் பதிவுகளில் சென்று கும்மியடித்தவனுமில்லை. அவரின் அன்பு அந்த கணத்தில் என்னை நெகிழச்செய்தது என்றால் மிகையில்லை. தேங்க்ஸ் லக்கி !

நாலைந்து பதிவுகள் எழுதி வைத்திருக்கிறேன்....திருத்தம் செய்து பதிப்பிக்க வேண்டும். ஆனால் எழுதி வைத்து பதிவிடுகிற பதிவுகளை விட ச்ச்சுட ச்ச்ச்சுட எழுதுகிற பதிவுகள்தான் என்வரையில் நன்றாக வருகிறதாய் ஒரு எண்ணம். நேற்று இனையம் வந்த சந்தோசத்தில் யு ட்யூப் பக்கமாய் சுத்திக் கொண்டிருந்த போது இந்த பாடல் சிக்கியது.....



கொஞ்சம் கிளுகிளுப்பான பாடல்தான்....ரம்யா க்ருஷ்ணனை கையை காலை ஆட்டி உட்ற்பயிற்சி செய்திருக்கிறார்!, நமக்கு அது முக்கியமில்லை (ஹி..ஹி..நெசமாத்தான் சொல்றேன்!).ரம்யாவின் பின்னனியில் அவர் காட்டியிருக்கும் வித்தையை கவனித்துப் பாருங்கள். தேர்ந்த ஒரு ஓவியனின் ஆயில் பெயிண்ட்டிங் போல ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார். இன்றைக்கு பெரும்பாலான ஒளிப்பதிவாளர்கள் செயற்கையான லைட்டிங்கில் காட்டும் அற்புதங்களை பாலுமகேந்திரா இயற்கையான வெளிச்சத்தில் படம் பிடித்திருக்கிறாரென நினைக்கிறேன்.மங்கலான அந்த எஃபெக்ட் கூட நன்றாகத்தானிருக்கிறது.

பாலுமகேந்திரா என்கிற கலைஞர் அவர் வாழும் காலத்தில் சரியான முறையில் கௌரவிக்கப் படவில்லை என்பது என் கருத்து....மற்றபடி இந்த பாடலில் ரம்யாவுக்கு பதிலாக பானுப்பிரியா மட்டும் ஈரம் சொட்ட சொட்ட ஆடியிருந்தால்....ஹெ...ஹெ...எழுதும் போதே மூடாவுதுப்பா....ஹி..ஹி...கன்னா பின்னான்னு கற்பனை பண்ணாம கண்ணை மூடீட்டு பாட்டைமட்டும் கேட்டுப் பாருங்க....விரகதாபம் வழிந்தோடும்...இளையராசா தி க்ரேட் !

”பத்தியகறி” , “வழுதுணங்காய்” இது எதை குறிக்கிறது என்பதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்....இல்லாங்காட்டி அடுத்த பதிவுல சொல்றேன்...


தமிழ்மணத்துக்கு விடைகொடுப்போம்....

Monday, June 1, 2009

உடன்பிறப்பே....

கடந்த சில நாட்களாய் உன் அருமை கண்மணியாம் யட்சனின் பதிவினை தமிழ்மணதிரட்டியில் இனைக்க இயலாததன் சதி இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழமண திரட்டியார் தங்களின் அளவுகோலுக்கு அருகே வராத பதிவுகளை தூக்கியெறிய போகிறோமென அறிவித்த போதுகூட நாம் அப்பாவியாய் அவர்களின் பதிவுக்குச் சென்று சென்று நம் பதிவினை இனைக்க முடியாத சோகத்தை அங்கே முறையிட்டிருந்ததை நீ அறிவாய்.

இதன் பொருட்டு நம் அடைப்பலகையையும் இரண்டொரு முறை மாற்றியதும், அதனால் நீ பட்ட சிரமமும் நாளைய வரலாறு கூறும் செய்திகளானதை நான் எப்படி மறப்பேன். என்னுடைய நுட்ப அறிவினை நீ சந்தேகிக்கிறாயோவென என்னி அதன் பொருட்டு சோதனை பதிவாய் ஃப்ரான்ஸ் தேசத்து அதிபரின் அழகிய மனையாளின் திருவுருவப் படத்தினை உனக்கு காட்டிட என்னி இனையமெங்கும் அலைந்து திரிந்து, உருண்டு புரண்டு உலகே வியக்குமந்த பெருமாட்டியின் அழகினை உனக்கு கொண்டு வந்து சேர்த்ததாய் அகமகிழ்ந்திருந்தேன்.

அதன் பின்னரும் இனைக்க இயலாமல் போகவே இது நம் மாற்றாரின் சதியாக இருக்குமோவென எண்ணி ஐயம் தெளிய தமிழ்மணத்தாருக்கு மின்னஞ்சலொன்று வரைந்தேன். அந்த மின்னஞ்சலை உன் பார்வைக்கு வைக்கிறேன்....படித்துப்பார் அதில் ஏதும் பிழையிருக்கிறதாவென.....

அன்புடையீர்,

எனது தமிழ் வலைபதிவான http://yatchan.blogspot.com கடந்த ஒரு வருடமாய் தமிழ்மண திரட்டியினால் திரட்டப்படுகிறது. கடந்த சில நாட்களாய் எனது பதிவில் இருக்கும் தமிழ்மணபட்டியினை காணக்கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக பதிவினை தமிழ்மணத்தில் இனைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனையடுத்து வேறு பல அடைபலகைகளை மாற்றியும் அதில் தமிழ்மண பட்டி தொடர்பான குறியீடுகளை இனைத்த போதிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.

தவறு என் பக்கதிலிருக்கிறதா அல்லது தமிழ்மண திரட்டி எனது பதிவினை திரட்டுவதில் இருந்து விலக்கி வைத்திருக்கிறதா என்பது குறித்தான தங்களின் விளக்கம் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்....

அன்பன்

சரவணக்குமார் (யட்சன்)

இதற்கான பதிலும் உடனடியாக வந்தது....

யட்சன்,

மன்னிக்கவும். அண்மைய மாற்றங்களின், முடிவுகளின் படி, உங்கள் பதிவும் தமிழ்மணத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

-செல்வராஜ்.




தமிழ்மணத்திலிருந்து விலக்கியிருக்கிறார்களாம், இந்த ஒரு வரியினை முன்னமே எழுதியிருந்தால் உன் அருமை கண்மணியாம் யட்சன் அடைப் பலகைகளோடு போராடியிருக்க வேண்டாம். அழகிய பெருமாட்டியின் படம் தேடி அலைந்திருக்க வேண்டாம். நமது கடிதத்தில் நமது பதிவினை விலக்கியிருக்கும் பட்சத்தில் அதற்கான காரண்த்தை கேட்டிருந்தோம்....அது நமது பண்பு ஆனால் அவர்களின் பதில் நறுக்குத் தெறித்தார் போல விரோதம் கொண்டவனின் மடலாய் இருப்பதை பார்த்து நீ எத்தனை வேதனைப்படுவாய் என்பதை என்னால் உணரமுடிகிறது.

இத்தகைய ஒரு பதில் எனக்கு எத்தனை கோபத்தை வரவழைத்திருக்கும் என்பதை நீ உணர்ந்திருபபர்ய், ஆனால் நாம் பண்பாடு தவறாதவர்கள், அடிப்படை நாகரீகம் தெரிந்தவர்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என நம்புபவர்கள். அதனால் நான் அவர்களுக்கு இப்படியொரு பதில் மடல் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடையீர்,
தங்களின் உடனடி பதிலுக்கு நன்றி....
எனது பதிவு எதனடிப்படையில் தங்கள் திரட்டியினால் விலக்கிவைக்கபடுகிறது என்பதை விளக்கிடும் பெருந்தன்மை உங்களுக்கு இல்லாவிடினும், அதை தெரிந்து கொள்ளும் ஆவலுமெனக்கு இப்போது எழவில்லை.
நான் தங்களின் மேலான அளவுகோலுக்குள் உட்படாத நிலையில் தொடர்ந்து எனது மற்ற பதிவுகளை உங்கள் திரட்டியில் இனைத்திருப்பது உங்களின் மேன்மைமிகு செயல்பாட்டிற்கு இடைஞ்சலாயிருக்குமென கருதுகிறேன்.
எனவே பங்குச்சந்தை தொடர்பான எனது நுட்ப பதிவினை உடனடியாக தங்கள் திரட்டியிலிருந்து நீக்கி விடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். எனது பங்கு வணிகம் தொடர்பான வலைப்பதிவின் முகவரி http://panguvaniham.wordpress.com
எனவே தயை கூர்ந்து எனது வேண்டுகோளினை ஏற்று எனது பங்கு வணிகம் பதிவினை தங்கள் திரட்டியிலிருந்து விலக்கி அதை எனக்கு உறுதிப்படுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
கடந்த நான்காண்டுகளாய் எனது பதிவினை தங்கள் திரட்டியில் இனைத்திருந்தமைக்கு நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
மு.சரவணக்குமார் (யட்சன்)

இப்போது நீ எத்தகை உணர்ச்சிப் பிழம்பாயிருபபாய் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாம் கடந்து வந்த பாதையில் எவரையும் இழிவாய் பழித்து திட்டியதில்லை, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு எவர் வீட்டு சுவற்றிலும் கிறுக்கியதில்லை. ஆபாசமாய் அர்ச்சித்ததில்லை....நமக்கு சரியென பட்டதை சனநாயக முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதை உணராத தமிழ்மணத்தார்....நமது வளர்ச்சியினை முடக்கும் விதத்தில் இத்தகைய செயலினை செய்திருப்பர் என நம்புகிறேன்.

நமது மடலுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நமது பதிவுகளை இனி அவர்கள் திரட்டுவதில்லை என்கிற உறுதிமொழியினை எதிர்பார்க்கிறேன். நமது பயனுள்ள பணி தொடருமென்பது உனக்கும் எனக்கும் தெரிந்தால் போதும்.

இறுதியாக ஒரு வேண்டுகோளினை உன் பாதம் பணிந்து கேட்கிறேன், தட்டமாட்டாயென்கிற உரிமையில் கேட்கிறேன்....இந்த பாதக செயலை என்னி மனம் வருந்தி, கொதித்தெழுந்து மாற்றாரை அவதூறு செய்திடும் வகையில் எந்த வொரு காரியத்தையும் செய்யமாட்டேன் என்கிற உறுதிமொழியினை நீ எனக்கு தந்திடல் வேண்டும்.

இனி அவர்கள் நம் வழியில் இல்லை, நாம் நமது வழியில் தொடர்கிறோம்.....அவர்களுக்கு வாழ்த்தி விடைகொடுப்போம்.

வாழ்க தமிழ்....வளர்க இங்கிலீஷ்.....

-யட்சன்

பலான பதிவு அல்லது சோதனை பதிவு

Saturday, May 30, 2009





ஃப்ரான்ஸ் அதிபர் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரின் அழகிய இளம் மனைவியை பற்றி என் மாதிரியான இளைஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்குமென்பதால் மற்றவர்களுக்கு அதாவது உங்களுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முன்னாள் மாடல் அழகியான இவரை காதலாகி கசிந்து சமீபத்தில் இரண்டாம் தாரமாய் கல்யாணித்துக் கொண்டார் அதிபர் சர்கோசாய்....

மாடல் அழகியாய் இருந்த காலத்தில் அம்மணி புகைப்படங்களுக்கு மிக தாராளாமாய் கொடுத்த படங்கள் இனையத்தில் உலாவரத்துவங்கின. இதற்கிடையில் கடந்த ஆண்டு அவரின் முழுமையான தரிசன(!) படமொன்று ஏலத்திற்கு வந்து 60000 ம் யூரோக்களுக்கு விலை போனது.

அந்த வரிசையில் இப்போது மேலே நீங்கள் பார்க்கும் படம் அடுத்த வாரத்தில் பெர்லினில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 1994ல் பமீலா ஹேன்சன் என்கிற புகைப்பட நிபுனரால் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ”Carla Bruni In Bed” என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு மொத்தமே 10 காப்பிகள் மட்டுமே போடப்பட்டதாக தெரிகிறது. ஏலத்திற்கு வரும் படத்தின் அளவு 16 x 24 அடியாம்...இதன் துவக்க விலையாக 6000 யூரோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஏலத்துல எடுக்கனும்னு நினைக்கிறவங்க மேலதிக விவரங்களை இங்கே தெரிஞ்சுக்கலாம்...

அடுத்த மாசம் அவரோட நிர்வாண ஓவியம் ஒன்னும் விலைக்கு வருதாம்...விவரம் கேட்டு பின்னால சொல்றேன்....

ம்ம்ம்ம்......நமக்கில்லை...நமக்கில்லை....சொக்கா.....ஹி..ஹி...

இனி தலைப்புக்கான காரணம்....

எனது பதிவுகளை தமிழ் மணத்தில் இனைக்க முடியவில்லை அல்லது தமிழ்மணம் எனது பதிவுகளை விலக்கி வைத்திருக்கறதா என்பதை அறியவே இந்த சோதனை(!) பதிவு....

புரிந்துணர்வுக்கு நன்றி ...ஹி...ஹி...


மத்திய அமைச்சரவையில் மாமனாரும், மருமகனும் மந்திரிகள்....

Thursday, May 28, 2009

இன்றைக்கு பதவியேற்றிருக்கும் மத்திய அமைச்சரவையில் மாமனாரும் மருமகனும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கேபினட் மந்திரியாக பதவியேற்றிருக்கும் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் திரு.பஃருக் அப்துல்லாவின் மகளை மணந்திருக்கும் திரு. சச்சின் பைலட்டும் இன்று மத்திய இனை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

இதைத் தவிர நம்மூர் மாமா, மருமகனும் கேபினட் மந்திரிகளாகியிருக்கின்றனர்...

மாமா - திரு.அழகிரி
மருமகன் - திரு. தயாநிதிமாறன்

இந்த மாதிரி வேற எங்கியாச்சும் நடந்திருக்கா?....

தெரிஞ்சவங்க சொல்லுங்க....

துன்பியல் நிகழ்வு....

Tuesday, May 19, 2009

வேறொன்றும் சொல்வதற்கில்லை....

வலிகள் பொதுவானவை....

பாரபட்சம் பார்ப்பதில்லை....

ம்ம்ம்ம்ம்....

கடந்து போகும் இன்னொரு

துன்பியல் நிகழ்வு....

கெட்ட செய்தி....தெளிவு படுத்துங்களேன்....

Sunday, May 17, 2009

இலங்கையிலிருந்து கெட்ட செய்தியொன்று இன்றைக்குள் வெளியாகலாமென நண்பரொருவர் சற்றுமுன் தொலைபேசினார். NDTV ல் கூட புலிகள் வசமிருந்த மக்கள் முற்றாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும். அதிபர் ராஜ பக்‌ஷே எந்த நேரத்திலும் முக்கியமான செய்தியினை அறிவிப்பாரெனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

விவரமறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்...

கவலையாயிருக்கிறது....ம்ம்ம்ம்ம்

SINGH IS THE KING !

Saturday, May 16, 2009



நாடு உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது....

வாழ்த்துகள் பிரதமரே...

நான் ரசித்த பெண்பதிவர்கள்...

Wednesday, May 13, 2009

நான் பதிவெழுத துவங்கிய வரலாறு மற்றும் அதன் காரண காரியங்கள் ஏற்கனவே புராண இதிகாசங்களில் பதிந்திருக்கிறபடியால் அதைபற்றியெல்லாம் தம்பட்டம் அடிக்காமல் நேரடியாகவே பெண்பதிவர்களிடம் வந்து விடுகிறேன்.

நான் பதிவெழுத துவங்கிய காலத்தில் மதி கந்தசாமி, துளசி கோபால் மாதிரியானவர்கள்தான் பிரபலமான பெண் பதிவர்கள்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் பெண்பதிவர்கள் வரத்துவங்கினர்.

அந்த காலகட்டத்தில் துளசிகோபாலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குமளவுக்கு வெறித்தனமான பாசக்கார கூட்டமிருந்தது இப்போதைய புதியவர்களுக்கு தெரியாது. காலப்போக்கில் அதன் தீவிரம் குறைந்து போனது... தானாக நிகழ்ந்ததா இல்லை நிறைய பெண் பதிவர்கள் வந்த பின்னால் நீர்த்துப் போனதாவென தெரியவில்லை. நான் மதிக்கும் மிக மூத்த பதிவர் திருமதி. துளசி கோபால். அவரின் எழுத்துகளில் காணும் எளிமையும், யதார்த்தமுமே அவரின் வெற்றிக்கும், இத்தனை நாள் நிலைத்திருப்பதற்கும் காரணமென நினைக்கிறேன். திருவாளர் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்களில் அம்மையாரும் அடக்கம். வலையுலக மனோரமாவாய் இவரை கூறலாம்....பல பரிணாமங்களில் மிளிர்பவர்.

மதி கந்தசாமியின் எழுத்துக்களில் காணக்கிடைக்கும் சரளமான நடைபோக்கினை பின்னாளில் நான் காப்பியடித்திருக்கிறேன் என்றால் அது மிகையில்லை. அவர் சென்னை அன்னாநகரில் வசித்த காலகட்டத்தைய அனுபவங்களின் பதிவுகள் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பதிவுகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்மணம் உருவாக காரணமாயிருந்தவர்களில் இவரும் ஒருவர் என்பதும், பின்னாளில் தமிழ்மண நிர்வாகம் கைமாறிய போது புதிய குழுவில் அங்கம் வகித்தவரென்பதும் குறிப்பிட தக்கது.

ராமச்சந்திரன் உஷா....இவரின் ஆரம்பகால பதிவுகளில் இருந்து இவரை தொடர்ந்து வருகிறேன். வலையுலகத்துக்கு முந்தைய குழும எழுத்துக்களில் துவங்கியது இவரது எழுத்தாளர் பணி. முன்பெல்லாம் அடிக்கடி...நானும் ரவுடிதான்னு சொல்ற, வடிவேலு மாதிரி அப்பப்ப நானும் எழுத்தாளர்னு சொல்லிக்குவார். உண்மையில் அதற்கான உழைப்பு அவரிடமிருந்தது. வளைகுடாவிலிருந்த போதும் சரி பின்னர் சூரத்துக்கு மாறி வந்த பின்னரும் சரி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது அவரின் ஆக்கமொன்று புத்தகமாய் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது . இவர் வரையில் இது கொஞ்சம் கால தாமதமாக நடந்த ஒன்றாகவே நினைக்கிறேன்.

கவிஞர் மதுமிதா.....இவர் சராசரிகளில் இருந்து விலகியவர் என்பது அவரது பதிவுகளில் தெறிக்கும். சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர். ஒரு சமயத்தில் பதிவர்களை பற்றிய தகவல்களை புத்தகமாய் போடப்போவதாய் சொல்லி பதிவர்களின் விவரம் கேட்டார். ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து கொடுத்தனர். அது வேலைக்காவாது என்கிற தீர்க்க தரிசனம் எனக்கு தெரிந்ததால் நான் கொடுக்க வில்லை. அது புத்தகமாய் வந்ததா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

மதுரா...அதிர்ச்சி வைத்தியமென்பார்களே அம்மாதிரியான எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் தனது பதிவினை அழித்துவிட்டார் என்பது வரலாற்று சோகம். காரணம் சில அநாமதேயங்கள். பின் நவீனத்துவமெல்லாம் இவரின் எழுத்துக்களுக்கு முன்னால் மண்டியிட வேண்டும். உண்மையான கட்டுடைப்பு அல்லது முகத்திலறைந்த எழுத்துக்கள் என்றால் அது இவரின் அடையாளம். அநாயசமாய் எல்லா எல்லைகளையும் தொட்டு மீளும் நடைக்கு சொந்தக்காரர். இவரின் ஆங்கில பதிவு மாத்திரம் தற்போது எஞ்சியிருக்கிறது. நான் பொறாமை பட்ட எழுத்து இவருடையது.

பொன்ஸ்....பரபரவென வலையுலகத்தில் பிரபலாமான பதிவர். நிறைய படிக்கிற ஒரு பதிவர். வலையுலக செயல்பாடுகளில் தன்னை முன்னிறுத்தியவர். பா.க.ச வின் நிறுவனர். ஜூனியர் துளசியாய் வருவார் என எதிர்பார்க்கப் பட்டவர். சில பிரச்சினைகளினால் இப்போது அமைதியாய் எந்த திரட்டியிலும் இனையாமல் பரபரப்பு சூழலில் இருந்து விலகி தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இவரின் எழுத்துக்களில் மிளிரும் முதிர்ச்சியும், அதில் அவர் செய்யும் பரிசோதனைகளும் எனக்கு மிக பிடித்தமான ஒன்று.

மங்கை, ரொம்பவும் அப்பாவியாய் எழுத ஆரம்பித்து இன்றைக்கு சகலராலும் மதிக்கத்தக்க பதிவராய் செயல்படுகிறார். இவருக்கு இவர் சார்ந்த துறை தவிர வேறெதுவும் எழுதத் தெரியாது என்பது மாதிரியாய் அது தொடர்பான பதிவுகளையே இடுபவர். கடந்த இரண்டு வருடங்களில் இவரின் எழுத்து பிரம்மிக்கத் தக்க வகையில் மெருகேறியிருக்கிறது. இவரின் துறை சார்ந்த புத்தகம் ஒன்றினை இவர் எழுதிட வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பு. பதிவுகளை உருப்படியான காரணத்திற்கு பயன்படுத்திடும் பதிவர். இவர் நம்ம தோஸ்த்து, அதுனால அவர் பதிவில் அதிகமாய் கலாய்த்திருந்தாலும் பெருந்தன்மையாய் என்னை விட்டு வைத்திருக்கிறார்.

கயல்விழி முத்துலட்சுமி....அல்லது ஜூனியர் பொன்ஸ் அல்லது ஜூனியர் துளசி. வீட்டின் கடைக்குட்டி சகோதரி மாதிரியான உரிமையும் கலகலப்புமான எழுத்து இவருடையது. இவரின் பயண கட்டுரைகள் அது தரும் விவரிப்புகள் என் மாதிரியான ஆட்களுக்கு வயிற்றெரிச்சலை தருபவை. வலையுலகின் பல தளங்களில் சிறப்பான பங்களிப்பு தரும் திறமைசாலி இவர்.

காட்டாறு.....இவரை ஜூனியர் மதுரா என்பேன். அவரளவிற்கு காரமில்லா விட்டாலும் துணிச்சலான எழுத்துக்காரர். என் அறிவிற்கு எட்டிய வரையில் வலையுலகில் இவர் ஒரு காதல் கவிதை ஸ்பெஷலிஸ்ட். வேலைப் பளு இவரை எழுதவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்.

தமிழ்நதி....போகிற போக்கில் காற்று இறகை ஏந்திச்செல்வது போல நம்மையும் மிதக்கவைத்துவிடும் மாயாஜாலம் இவரது எழுத்துக்களில்....வாக்கியங்களை கட்டமைப்பதில் இவரின் நேர்த்தி அசாத்தியமானது...ஸ்கூல் பையன் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வதைப்போல இவரின் வாக்கியங்களை திரும்ப திரும்ப படித்துப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். தன் இயல்புக்கு மாறாய் சென்னை செந்தமிழில் இவர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்கள், மொழியின் மீதான அவரின் ஆளுமை புலப்படும். இவருக்காகவாவது இலங்கையில் நிலமை சீரடைய வேண்டுமென பல முறை யோசித்திருக்கிறேன். அத்தனை சோகம் ஊடாடுகிறது இவரின் எழுத்துக்களில்....ம்ம்ம்ம்ம்

டாக்டர்.டெல்ஃபின் விக்டோரியா.....பெரிய போலீஸ் அதிகாரியின் அதிகாரி(பாஸ்!)....மளமளவென எழுதியவர் திடீரென வேலை நிமித்தமாய் எழுதுவதை குறைத்து விட்டார். துறை சார்ந்த விடயங்களை எளிமையாய் விவரிக்கின்றன இவரது பதிவுகள்.

இந்த அளவில் முடித்துக் கொள்வோம், இதற்காக மற்ற பெண் பதிவர்கள் என் மீது கோவிக்க வேண்டாம். என்னை மிகவும் பாதித்தவர்களை பட்டியலிட்டிருக்கிறேன் அவ்வளவே....யாரையாச்சும் விட்ருக்கேனா தெரியலை, அப்படி யாராவது உரிமையா வந்து திட்டினா கால்ல விழுந்துர்றேன் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த பதிவினை இந்த அளவில் முடிக்கிறேன்.













காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது ? - Exit polls முடிவுகள்


Exit Poll Source

BJP

CONGRESS

THIRD FRONT

OTHERS

Headlines Today

180

191

38

134

India TV

194

195

108

46

News X

191

199

104

48

Congress

168

205

-

164

BJP

220

170

-

153

ஓடி வருகிறான் உதய சூரியன்.....

நான் தி.மு.க காரன் இல்லை...

ஆனா இந்த தடவை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டுட்டேன்...

அதுனால தி.மு.க ஜெயிக்கும்னு நினைக்கிறேன்....

தி.மு.க தோத்தாலும் கவலை இல்லை...சந்தோசம்தான்.

ஏன்னா அம்மா ஜெயிச்ச அடுத்த நிமிசம் இலங்கைக்கு ராணுவத்த அனுப்பி தமிழீழம் அமைச்சுக் கொடுத்துருவாங்கல்ல....

வாழ்க ஜனநாயகம்....

அப்படி ஏதும் நடந்துவிடுமா...?

Sunday, May 10, 2009

சோனியா சென்னை வருகிறாராம்...என்னவொரு முட்டாள்தனமான முடிவு !

வலையுலகில் உணர்ச்சிபிழம்பாய் கொதித்துப் போயிருக்கும் அநேக தமிழ்பதிவர்களை ப்ற்றி அவருக்கு தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இதையெல்லாம் அறியாமல் சோனியா அவர்கள் இந்த தன்மான் சிங்கங்களின் குகைக்குள்ளேயே வருக்கிறார். என்னவொரு அசட்டுத்தனம்....ம்ம்ம்ம்

அநேகமாய் இந்த தமிழ் பதிவர்கள் எல்லோரும் சோனியா வரும் வழியில் அல்லது பொதுக்கூட்டத்தில் ஏதாகிலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்...ஏனெனில் அவர்களின் பதிவில் அத்தகனை காரமும், வீரமும் இருந்தது.

ஜெயா டிவியில் இவர்களின் போராட்டத்தினை நேரலையாக காட்டுவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே அந்த அலைகாட்சியினை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நாளைய செய்திதாள்களில் நமது பதிவர்களின் வீரதீர பிரதாபங்களை படித்து மகிழ்வோம் என்கிற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.

பின்குறிப்பு : இனி எவரும்(நான் உட்பட) இவர்கள் ஏசி ரூமில் ஓசி கண்ணியில் பதிவிடும் வாய்ச்சொல் மண்ணிக்கவும் படங்காட்டும் பதிவுலக வீரர்கள் என யாரும் சொல்லமுடியாது.

விஜயகாந்த்தா இப்படி ?...நம்பவே முடியலை!

Monday, May 4, 2009



விஜயகாந்த் இப்படியான பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமே....நம்பவே முடியாத அளவிற்கான இத்தனை ஸ்டைலிஷ்ஷான பாடல் காட்சி விஜயகாந்த் படஙக்ளில் கனவிலும் எதிர்பாக்க முடியாதது....நிச்சயமாக இந்த பாடலுக்கு உழைத்த அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்....

பானுப்ரியாவை பத்தி தனியா ஒரு பதிவெழுதனும்...ம்ம்ம்ம்ம்

இனி இப்படியெல்லாம் பதிவுகள் போடப்போவதில்லை...

கடந்த எனது பத்து பதிவுகளில் பெரும்பான்மையானவை இலங்கை நிலவரம் , அதையொட்டிய அரசியல் மற்றும் வலையுலக விளம்பர பித்தர்களையொட்டியே அமைந்திருந்தது, தற்செயலானதல்ல.

வலியின் வேதனையில் பதிவிடுவோர் ஒருபுறம்,,,,வலிக்கிற மாதிரி திறமையாய் நடிப்பவர்களொருபுறம். இதுதான் வாய்ப்பென தங்கள் அரசியல் எதிர் முகாமை வசைமாறியிடுவது ஒருபுறம். சந்தடி சாக்கில் நான்கூட பிரபாகரனுக்கு கடிதம் எழுதி,, நமீதாவுக்கு வீரவணக்கம் செலுத்தி என் சுய அரிப்புகளை தீர்த்துக் கொண்டேன்

இத்தனை வலையுலக கூத்துகள்...மன்னிக்கவும் வலையுலக உணர்ச்சி கொந்தளிப்புகள் நடந்தும் இலங்கையில் ஒரு மயிரும் பிடுங்கப்படவில்லை என்பதுதான் வேதனையான வேதனை.....இலங்கையில் உருப்படியாக நடக்கும் என எதிர்பார்ப்பதோ அல்லது வலையுலக கலைஞர்களை தோலுரிப்பதிலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

கலைஞர் மட்டும் கையாலாகாமல் இல்லை....பெரும்பான்மையான தமிழகத்து தமிழனே அப்படித்தானிருக்கிறான் என்பதுதான் உண்மை.....ஊருக்கு நாற்பது பேர் கொதிதெழுந்து போராடுவதால் என்ன நடந்துவிடுமென எதிர்பார்க்க முடியும். வைக்கோவுக்கும், திருமாவுக்கும் அரசியல் சுயநலமே பிரதானமாய் போய்விட்டதால் இவர்கள் கலைஞரை விட ஆபத்தானவர்களாகி போய்விட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.. ஜெயாவும், ராமதாசுவும் ...சோனியாவை விட, காங்கிரஸை விட ஆபத்தானவர்கள்.

அநேகமாக வரும் மே 13ம் தேதி மாலையில் இருந்து மிக வலுவாக தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தப்படலாம். மே 16ம் தேதிக்குள் பிரபாகரனுக்கு முடிவுகட்டப்படும் நிதர்சனங்களை எதிர்பார்க்கிறேன். இருக்கிற மிச்ச சொச்ச தமிழனும் ஈழத்தில் பிச்சைக்காரர்களை விட கேவலமாய் போய்விடுவார்கள். இத்தனைக்கும் பின்னால்....

கலைஞர் தமிழின தலைவராகவே மிச்சநாளைக்கு தொடர்வார்...
ராசபக்‌ஷே சிங்களர்களின் காவல் தெய்வமாவார்...
பிரபாகரன் சரித்திர நாயகனாவார்....
கொத்து கொத்தாய் செத்துப்போன புலிகள் வித்தாவார்கள்....
சோனியா நவீன கண்ணகியாய் புன்னகைக்கலாம்....
வைக்கோவும், நெடுமாறனும் இனி மலேய தமிழனுக்காய் மருகத்துவங்கலாம்....
இவர்களுக்கிடையே சிக்கி இழப்பதற்கேதுமில்லாத ஈழத்து அப்பாவிகள் என்னவாவார்கள்.....

வலிக்கிறது.....

இனி இப்படியெல்லாம் பதிவுகள் போடப்போவதில்லை.....


கொலதெய்வம் நமீதாவிற்கு வீரவணக்கம்...

Tuesday, April 28, 2009


Namitha in Mini Dress in Vyabar - The top video clips of the week are here


சமீபத்தில் பாடலாசிரியர் தாமரைக்கு வீரவணக்கம் என சில பதிவுகளை பார்த்தேன். தமிழர்களின் உணர்வினை தூண்டியதால் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக அந்த பதிவுகள் இருந்தன... அவர் தூண்டிய உணர்வினால் அங்கே குழுமியிருந்தவர்களும், இங்கே வலையுலகில் பலரும் சிலிர்த்துப் போனார்கள் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன் .

அப்படி என்னதான் பேசினாரென பார்த்தால் வழக்கமான பட்டிமன்ற பேச்சாளர்களின் தரத்திலான பேச்சாகவே எனக்கு பட்டது. இந்தியன் என்கிற இனமே இல்லையாம், இவரின் கடவுச்சீட்டில் நேஷனாலிட்டியில் தமிழன் என்று போட்டிருக்கிராறா அல்லது இந்தியன் என போட்டிருக்கிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

நாலுவரி கவிதை...பலி...புலி என எதுகை மோனையாக பேசியதற்காவெல்லாம் உணர்ச்சி வசப்படமுடியாது. இவரை விட அண்ணன் டி.ஆர் அதிரடியாக எதுகை மோனையில் கவிதை சொல்லி கேட்டிருக்கோமாக்கும்.

துப்பாக்கி தூக்கிக் கொண்டு போவாராம்.....அவரை சுற்றியிருக்கும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் துயர்களை கண்டு ஒரு துடப்பத்தைக் கூட தூக்கியதாக அறியப்படாதவர் இலங்கைக்கு துப்பாக்கி தூக்கிக் கொண்டு போகப்போகிறாராம்.....ஹேய் யாருப்பா அது அதுக்குள்ள உணர்ச்சி வசப்படறது.....இன்னும் இருக்கு

ஜெயலலிதா அம்மாவாசை, கலைஞர் அம்மாவாசைக்கு அடுத்தநாளென்றால் இத்தனை வயதில் தமிழகத்திற்கு, தமிழினத்துக்கு வெளிச்சம் போட இவர் என்ன முயற்சித்தார் என்பதையாவது அந்த மேடையில் சொல்லியிருக்கலாமே!... யார் தடுத்தது அவரை?

மேடை கிடைத்த உற்சாகத்தில், கூட்டம் கும்மியடிக்கிற போதையில் இவர் பேசியதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு பதிவுபோட்டு வீரவணக்கம் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இத்தகைய உணர்ச்சி வயப்பட்டு ஆராதனை செய்வது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து தொடர்கிறது.இம்மாதிரியாய் காலங்காலமாய் மலிவான உணர்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதுதான் தமிழனின் துரதிர்ஷ்டம்.

இந்த வகையில் இவரை விடவும் தமிழர்களின் உணர்வினை பல மடங்கு தூண்டிய கொலதெய்வம் நமீதாவும் வீரவணக்கம் செலுத்த உகந்தவர் என்கிற கருத்தினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாங்கிய காசுக்கு வஞ்சமில்லாமல் உணர்வினை தூண்டிய ...தூண்டிக்கொண்டிருக்கும் நமீதாவுக்கு வீரவணக்கம்....

டிஸ்கி:- இந்த பதிவு இலங்கை தமிழரின் துயரத்தை நோக்கியதில்லை....அதை வைத்துக் கொண்டு இங்கே வலையுலகில் சீன் போடும் சில சிந்தனையாளர்களை நோக்கியதே....

தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்...

தமிழீழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கடிதம்.....

மரியாதைக்கு உரிய ஐயா,

நலம், நலமே விழைய பிரார்த்திக்கிறேன். தங்களின் தற்போதைய முகவரி தெரியாததால் இந்த கடிதத்தினை எனது வலைபதிவின் மூலமாக தங்களின் மேலான பார்வைக்கு வைக்கிறேன். இந்த கடிதத்தை இங்கே வலையுலகமெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். சமீபகாலமாக என் போன்ற சாமானிய தமிழனுக்கு, தமிழகத்திலும் சரி, வலையுலகத்திலும் சரி கொசுத்தொல்லையை விட மோசமாக தொல்லை தருபவர்கள் இந்த தமிழுணர்வாளர்கள்.இவர்களின் பேச்சையும் எழுத்தையும் கடந்து போகும் போது எனக்குள் குற்றவுணர்வு மேலோங்குகிறது. நான் தமிழனாய் பிறந்திருந்தாலும் அநியாயத்திற்கு இந்தியனாக இருக்கிறேனோவென்ற சந்தேகம் என்னை மிகவும் உறுத்தியதால் இது குறித்து மேலதிகமாய் சிந்தித்த போது எனக்குள் எழும்பிய சில சந்தேகங்களை இந்த கொசுத்தொல்லை ஆசாமிகளிடம் கேட்பதை காட்டிலும் பிரச்சினையின் நாயகனாகிய உங்களையே கேட்டிடலாமென இந்த கடிதத்தினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுக்கு நேரமிருந்தால் பின்வரும் எனது சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு பதில் தரவேண்டுகிறேன்.

  1. ஏசு வருகிறார்...வந்து விட்டார்...வந்து கொண்டேயிருக்கிறார் என்பது மாதிரியாக முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழீழம் வருகிறது...வந்து கொண்டிருக்கிறது...வந்து விட்டது என்று நீங்கள் சொன்னதை வாய்பிளந்து உளம் மகிழ்ந்து கேட்ட அப்பாவி ஈழத்துப் பொதுமகனுக்கு, அல்லது வேர்வை சிந்தி உழைத்த தங்கள் பணத்தை ஆயுதம் வாங்கிட அள்ளி அள்ளிக் கொடுத்த புலம் பெயர்ந்த தமிழனுக்கு நீங்கள் இது வரையில் நீங்கள் திரும்பக் கொடுத்தது என்ன?
  2. பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்றவர்களின் அனுசரனையும் ஆதரவு இல்லாமல் தமிழீழம் சமைக்க இயலாது என்கிற அடிபடை அரசியல் கூறை எங்கனம் மறந்தீர்கள்? உண்மையில் தமிழீழம் படைக்க நினைத்திருந்தால் மாவோ தீவிரவாதிகள் சீனாவிடம் ஆதரவு பெறுவதைப் போல நீங்கள் ஏன் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்ற அதிகார மய்யங்களோடு சுமூகமான உறவினை ஏற்படுத்திக் கொள்ள முனையவில்லை?
  3. ராஜீவ்காந்தியின் கொலைக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது கலைஞர் அந்த கூட்டணியில் இருந்தார், தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணன் வைக்கோவின் கட்சியினர் அமைச்சராக கூட இருந்தனர், அந்த சந்தர்ப்பத்தை ஏன் தாங்கள் பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை? ஐரோப்பிய நாடுகளின் அடிவருடியாகி அவர்கள் பின்னால் போனதன் மர்மம் என்ன? புலம் பெயர் தமிழர்களிடம் இருந்து பணம் கறக்கும் உத்தியாக அந்த நிலைப்பாட்டினை எடுத்தீர்களா?
  4. போரில் உங்கள் கை ஓங்கியிருந்த போது ஐரோப்பிய நாடுகளின் மேற்பார்வையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அதை சமயோசிதமாக பயன் படுத்திக் கொள்ளாதது யார் குற்றம்? இந்தியாவின் குற்றமா?
  5. ராஜபக்‌ஷே தேர்தலில் வெற்றிபெற்றால் அரசின் தீவிரத்தன்மை அதிகரிக்குமென தெரிந்தும் மென்மையான போக்கினை கடைபிடித்த ரணில் விக்கரமசிங்கேயை தோற்கடிக்க ஏன் முனைந்தீர்கள்?
  6. ”துன்பியல் நிகழ்வு” என்கிற வார்த்தையின் பின்னால் இத்தனை பெரிய வலியும் வேதனையும் இருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்திருந்தீர்களா? அதன் எதிர்வினையை தவிர்க்க என்ன முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தினீர்கள்?
  7. ராஜீவ் காந்தியை கொல்ல உங்களுக்கு எத்தனை நியாயமிருக்கிறதோ அத்தனைக்கு குறைவில்லா நியாயம் சோனியாவிற்கு உங்களை பழிதீர்ப்பதில் இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா?
  8. ஆண்ட்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் மாதிரியான ராஜ தந்திரிகள் இல்லாமல் போனதுதான் உங்களின் படுதோல்விக்கு காரணம் என நினைக்கிறீர்களா?
  9. “செய் அல்லது செத்துமடி” என இன்றைக்கு தமிழகத்தில் உங்களின் ஆதரவாளர்கள் தமிழக முதல்வரை ஏகத்துக்கு கேள்வி கேட்கின்றனரே, அந்த கேள்வி இப்போது உங்களுக்கும் பொருந்தும்தானே? உன்னால் முடியாவிட்டால் பதவியை தூக்கியெறிந்து விட்டு போய்விடு, ஜெயலலிதா வந்து தமிழீழம் வாங்கித்தருவார் என்பது மாதிரியாக கலைஞரை பார்த்து கேள்வியெழுப்பும் இந்த தமிழுணர்வாளர்கள் நாளைக்கு உங்களை பார்த்து இதே மாதிரியான கேள்வியை கேட்டால் என்ன செய்வீர்கள்?
  10. இன்றைக்கு உங்களின் ராணுவ கட்டமைப்பு முழுமையாக இலங்கை அரசினால் தகர்க்கப் பட்டுவிட்ட நிலையில், காடுகளுக்குள் பொதுமக்களை கேடயமாக நிறுத்திக் கொண்டு பதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிற இலங்கை அரசின் பரப்புரையினை அறிவீர்களா? அப்படிபட்ட ஒரு நிலையினை நீங்கள் இழிவாக கருதவில்லையா? அதை தவிர்க்க என்ன செய்ய போகிறீர்கள்?
  11. கருணா, ஜெயலலிதா இவர்களில் யார் நல்லவர்?, யாரை நம்பலாம்?
  12. மக்களின் நலனுக்காக இயக்கமா? அல்லது இயக்கத்திற்காக மக்களா? இத்தனை சாவுக்கும் இலங்கை அரசும், இந்தியாவும் மட்டும்தான் காரணமா?இத்தனை பேர் செத்துப் போனதில் உங்களின் பங்கென எதுவுமில்லை என நினைக்கிறீர்களா?
இன்னமும் ஒரு சில கேள்விகள் இருக்கிறது, ஆனால் நீங்கள் நேரடியாக யுத்தகளத்தில் செயல்படுவதாக வந்த செய்திகளின் காரணமாய் உங்களின் பொன்னான நேரத்தினை கருத்தில் கொண்டு இத்துடன் இந்த மடலை நிறைவு செய்கிறேன். எனது இந்த கடிதத்தில் எந்தவித உள்நோக்கமோ அரசியல் உள்குத்துகளோ இல்லையென்பதை உறுதிபட கூறிட விரும்புகிறேன். ஒரு சாமானிய இந்தியனின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடம் விடைபெறுகிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

யோசிக்க ஆரம்பித்திருக்கும் தமிழன்.




வெட்கம் கெட்ட பதிவர்கள்....

Thursday, April 23, 2009

சமீபத்தைய எனது பதிவொன்றின் தலைப்பு....”ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை”. இந்த பதிவு அநேகர்களுக்கு கோவத்தை வரவழைத்த பதிவு. ஈழத்துயரத்தை பதிந்து வைக்கிறேன் பேர்வழியென சுயவெளிச்சம் போடத்துடிக்கும் அற்பர்களை பற்றியதே அந்த பதிவு...

இன உணர்வை வெளிப்படுத்துவது குற்றமா என்கிற தொணியில் நண்பரொருவர் கூட பதிவிட்டிருந்தார். அதில் விளக்கமும் கூறியிருந்தேன். இன்றைக்கு சூடான இடுகையில் முதலில் இருக்கும்பதிவின் தலைப்பு “பிரபாகரன் கைது”...இதுவா இன உணர்வு?, இதுவா இனப்பற்று?

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் தங்களின் தேசியத்தலைவராய் வரித்துக் கொண்ட ஒரு மனிதனை...எது நடக்கக் கூடாது என இத்தனை பேர் வரிந்து கட்டிக்கொண்டு போராடுகிறார்களோ அந்த தகவலை எதன் அடிப்படையில் அந்த பதிவர் பதிவிட்டார்?

இவர் ஒரு உதாரணமே...இவர் மாதிரி எண்ணற்ற காக்காய்கள் இங்கே பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பதிவுலகம் அர்த்தமுள்ளதாய் தொடர வேண்டுமெனில் இவர்களை புறந்தள்ளுதல் அவசியம்.

"சற்றுமுன்" என்கிற ஒரு செய்தி தளம் ஒன்று பல பதிவர்களால் இனைந்து நடத்தப்பட்டது. செய்திகளை அதன் சூடு குறையாமல் உண்மைக்கு சற்றும் விலகாமல் தொகுத்தளித்தனர். அதே போல ஒரு முயற்சி தற்போதைக்கு தேவைப்படுகிறது. அக்கறையுள்ள பதிவர்கள் ஒன்றினைந்து ஈழத்துயர் குறித்த விழிப்புணர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான ஒரு வலைப்பதிவினை தொடங்கலாம்.

அம்மாதியான ஆக்கப்பூர்வமான ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையே இப்போதைய அவசியமான அவசியம்....வெறுமனே ஒப்பாரி வைக்கிறேன் பேர்வழியென சவ ஊர்வலத்தில் சம்பந்தமே இல்லாமல் குடிவெறியுடன் கூத்தடிக்கும் விளம்பர பிரியர்கள் தமிழ் வலையுலகத்திற்கு தேவையில்லை.....

ஒரு கார் விபத்தும், சில கதைகளும்...

Tuesday, April 21, 2009

ஆஸ்தான சோதிடர் மாதிரி எனக்கு ஒரு ஆன்லைன் சோதிடர் இங்க இருக்கார். அவர் இங்கே பதிவெழுதும் ஒரு பிரபலர். அவரை நான் எழுத்தாளர் என்றுதான் அழைப்பேன்.இனிய நண்பர்....இம்புட்டு சொல்லீட்டு அவர் பேரை சொல்லாம இருக்க கூடாதுல்ல...சரி நம்ம வழக்கப்படி பதிவின் கடைசியில அவரை தெரிஞ்சிக்கலாம்.

இனி மேட்டருக்கு வருவோம்....அவருக்கு ஜோதிடத்தில் பரிச்சயம் இருந்ததால், என் ஜாதகத்தை குடுத்து கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்...இந்த இடத்தில் மிக முக்கியமான வரலாற்று குறிப்பு ஒன்றை நினைவில் வையுங்கள். நான் பெரியாரின் ஒரே ஒரு போலி தொண்டன். பழுத்த நாத்திகவாதி,பொதுவுடமை(இதுக்கு என்னா அர்த்தம்?)கொள்கை பற்றாளன்.

அவரும் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு...ஏழரைச்சனிக்கே ஏழரைச்சனி பிடிச்சா எப்படியிருக்குமோ அப்படி மோசமா இருக்கு உங்கள் நேரம் அப்படீன்னு சொன்னார்...அடடா 'என்ன இது மதுரைக்கு வந்த சோதனை'ன்னு நினைச்சிட்டு இருந்தப்போ...சொல்லி வச்ச மாதிரி நம்ம பிஸினஸ் ஒன்னு புட்டுகிச்சி. அதிகமில்லை ஜெண்ட்டிமென் அண்ட் உமன்.....ச்ச்ச்சும்மா ஒரு 30 லட்சம்கிட்டே காணாம போச்சுன்னுட்டானுங்க.
ஆஹா ஜோசியம் ஒர்க் அவுட் ஆகுது போலன்னு அவர்கிட்டே திரும்ப கேட்டேன். மே மாசம் வரை ரொம்ப மோசமா இருக்கு ஜாக்கிரதை. விபத்து கூட ஆகும்னு ஒரு எக்ஸ்ட்ரா டோஸ் வேற குடுத்தார்.

ஒரு டாக்டர்கிட்ட பார்த்துட்டு இன்னொடு டாக்டர் கிட்டே செக்கண்ட் ஒப்பீனியன் வாங்குவோமே அது மாதிரி இன்னொரு இனைய நண்பர்...அவர் இவரைவிட எக்ஸ்பர்ட், அதாவது அவங்க அப்பா பெரிய்ய்ய்ய ஜோதிடர், இவர் பங்குசந்தையில கலக்கறவர். அவர்கிட்டே கேட்டேன். அவரும் எல்லாம் பார்த்துட்டு மொதல்ல சொன்னத விட மோசமா சொன்னார்.இவரோ ஒரு வருசம், ஒரு மாசம், பதினோரு நாளைக்கு நெம்பா கஸ்டமுனுட்டார்.சரி எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்த்துட மாட்டோமான்னு மனச தேத்திட்டு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன்.

சின்ன வயசுல எல்லா பயபுள்ளயும் நான் டாக்டராவேன்...எஞ்ஜினியாராவேன்னு சொல்லிட்டு திரியற மாதிரி எனக்கும் எப்படியாச்சும் ப்ரைம் மினிஸ்டராய்டனும்னு கொள்ள ஆசை...ஆனா சுயேச்சையா நின்னுதான் அந்த பதவிக்கு போகனும்னு ஒரு பக்கா கண்டிசனோட வாழ்ந்துட்டு இருக்கேன்னு வச்சிக்கங்க.இதெல்லாம் நடக்குமான்னு கேக்க கூடாது . கலைஞர் தமிழன தலைவர்னா நம்பறீங்க, ஜெயலலிதா புரட்சி தலைவின்னா நம்பறீங்க....ஏன் நான் ஆவமுடியாதுன்னு நினைக்கறீங்க...நம்புங்கப்பா...ப்ளீஸ்....எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா...ஸோ...நம்புங்க..ஹி...ஹி...

இனி மேட்டருக்கு வருவம்...எலெக்‌ஷன்னு சொல்லீட்டாய்ங்க இப்ப விட்டா இன்னும் அஞ்சு வருசம் வெயிட் பண்ணனுமே...ன்னு மண்டைக்குள்ள மணியடிக்க எந்த தொகுதில நிக்கலாம்னு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். மதுரையில எப்படியும் அஞ்ஞாநெஞ்சன் நிப்பாரு, நம்மால அவர் வெற்றி வாய்ப்பு தவறிப் போய்டக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில நிப்பம்னு முடிவு பண்ணீட்டேன். சரி எல்லா அரசியல் வாதியும் போற மாதிரி நம்ம ஆன்லைன் சோதிடர்கிட்டே ஒரு வார்த்தை கேப்போம்னு கேட்டேன்...அவர் நான் சொன்ன எல்லாத்தையும் கேட்டார்.....

ஒரே ஒரு வார்த்தைதான் சொனனார்.....அடுத்த எலெக்‌ஷனுக்கு பார்த்துகிடுவம்னு முடிவுபண்ணி...ஸ்ரீபெரும்பதூர் தொகுதிய இந்த வாட்டி யாரோ ஒரு எமகாதகபயலுக்கு விட்டுகுடுத்துட்டேன்.என்ன சொன்னார்னு சொல்லவே இல்லையே....அவர் சொன்னது...உங்களுக்கு எவ்ளோவ் கெட்ட நேரம்ங்கறதுக்கு இதை விட வேற என்ன சாட்சி வேணும்...ம்ம்ம்ம்ம்....என்னத்தச் சொல்ல! , இந்தியா ஒரு இளம் எம்.பி..யை இந்த முறை நழுவவிட்டது.

இந்த காலகட்டத்துல நம்ம மற்ற தொழில்களும்...ஈ, காக்காய், குருவி எல்லாம் ஒட்டத் துவங்கிவிட்டது, எல்லா பயலும் ஃபேஷனா சொல்லிக்கற மாதிரி ரிஷசன் நம்மளையும் போட்டு தாக்கீருச்சி. ஆளாளுக்கு ஆள்குறைப்பு, சம்பள குறைப்புன்னு படம் காட்டிகிட்டு இருக்கறதால நாமளும் ஜோதில கலந்துக்குவம்னு ரொம்ப சேட்டை பண்ணீட்டு இருந்த நாலு வாட்ச்மேனையும், ரெண்டு ட்ரைவரையும் இதான் சாக்குன்னு அனுப்பீட்டு நாங்களும் ஆட்குறைப்பு பண்ணீருக்கோம்லன்னு சொல்லீட்டிருக்கேன்.

ரெண்டு கதை சொல்லியாச்சுல்ல....இன்னும் ஒரு கதையோட முடிச்சிர்றேன்...சில கதைகள்னு தலைப்பு வச்சா இப்படித்தான், எழுதற எனக்கும் கஷ்டம், படிக்கற உங்களுக்கும் கஷ்டம்...ஆனாலும் எனக்கு இப்படி எழுதற்துல ஒரு சுயநலம் இருக்கு...ஹி..ஹி...இந்த பதிவின் நீளத்தை பார்த்துட்டு என்னையும் ஒரு உண்மைதமிழன்னு ஒத்துக்குவீங்கள்ல...ஹி...ஹி...

ட்ராக் மாறுது...மேட்டருக்கு வருவோம்...இந்த ஜோதிட மேட்டர்ல இருந்து கார் ஓட்ட தடைன்னு சொல்லி ஒரு பெரிய இம்சையான வயசான தாத்தா ஒருத்தரை நமக்கு ட்ரைவரா போட்டுட்டாங்க. அவர மாதிரி ஒரு அதிபத்திரமான ட்ரைவரை இனி இந்த உலகம் தேடித்தான் கண்டு பிடிக்கனும்.ரோட்ட க்ராஸ் பண்ற ஈ, எறும்புக்கெல்லாம் வண்டிய நிறுத்தி ஓட்றவர்னா பார்த்துக்கங்க...என்னத்த சொல்ல நம்ம நேரம் அப்படி......

போன ஞாயித்துக்கிழமை நம்ம ஜூனியர்ஸ் எல்லாம் வெளில போகனும்னு சொன்னானுங்க, சரி வாங்கடான்னு நம்ம பாஸ் தலைமையில கெளம்பி போனோம். நாந்தான் ட்ரைவர் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.அன்னா நகர்ல சுத்தீட்டு, ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டு திரும்பும் போது மணி பத்தரை ஆய்டுச்சி....நகரை விட்டு வெளியே வந்துட்டு இருந்தேன்...எனக்கு முன்னால ஒரு டவுன் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்துல ஆளுங்களை இறக்கி விட்டுட்டு இருந்துச்சி...ஓவர் டேக் பண்ண இடம் இல்லாததால அந்த வண்டிக்கு பின்னால நின்னுட்டு இருந்தேன்.

முன்னால இருந்த பஸ் நகர ஆரம்பிக்கவும், நான் கெளம்பலாம்னு கியர் போட.....டமாஆஆஆஆஆல்...னு ஒரு சத்தம்...பின்னால ப்ரேக் பிடிககாம வந்த லாரி மோதினதுல வண்டி ஒரு நாலஞ்சு அடி உயரத்துக்கு பறந்து அப்படியே ஒரு லாங்க்ஜம்ப் ஒரு பத்தடி தள்ளி போய் விழுந்து...கியர் போடாததால ஒரு இருபது அடி ஓடி நின்னுச்சி...பின் சீட்டுல இருந்து ஜூனியர் பறந்து என்னை கடந்து போனதை பார்த்தேன்....தலை முடியை கொத்தாய் பிடித்து சுவற்றில் நங்கென்று அறைந்தார் போல ஸ்டீரிங் வீலில் போய் மோதினேன். நெற்றியிலும், அடிவயிற்றிலும் அடி....பொறி கலங்கி போவதன் அர்த்தம் புரிந்த கணமது....

அந்த நிலையில் மற்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதே பிரதானமாய் ஓடியது...யாருக்கும் எதுவும் ஆகியிருக்க கூடாது என்கிற பரிதவிப்புடன் மற்றவர்களை தேடினேன்....மகள் பின்னால் இரண்டு சீட்டுக்கிடையில் கிடந்ததை பார்க்க முடிந்தது.பாஸ் முன்னாலே பறந்து வந்தவனை கேட்ச் பிடித்திருக்க வேண்டும்....இறுக்கி அனைத்தமாதிரி என்னை பார்த்தவாறு முன்னால் சரிந்திருந்தார்.ஒவ்வொருவராய் எழுந்திருக்க...யாருக்கும் பெரிதான காயமோ, ரத்தமோ இல்லையென்பதன் நிம்மதிக்கு ஈடாக அப்போதைக்கு இந்த உலகத்தில் எதுவுமில்லை எனக்கு.

அப்புறம்....கொலைவெறியுடன் லாரிக்காரனோடு சண்டைபிடித்தது....ஆட்களை வரவழைத்து லாரியை எங்கள் இடத்தில் சிறைபிடித்து வைத்துக் கொண்டு பஞ்சாயித்து பைசா வாங்கியதெல்லாம் தனி கதை.... அதையும் இப்பவே சொல்லீடவா? ஹலோ எங்க ஓடறீங்க...பதிவை முடிச்சிட்டேன்...கடைசி வரிய படிச்சிட்டு போங்க....ஹி..ஹி...

இந்த பதிவருக்கும்...மேலே சொன்ன ஆஸ்தான ஆன்லைன் சோதிடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நம்பிடுமாறு வேண்டுகிறேன்.

கருப்பு எம்.ஜி.ஆரும்....கற்பிழந்த பாடலும்....

Sunday, April 19, 2009



இந்த வீடியோவை கேளுங்கள்....(?)

ஆமாம் கேளுங்கள்....மிக பொறுமையாய் கேளுங்கள்....

ஆமா ! தெரியாமத்தான் கேக்குறேன்...இந்த தமிழ் உணர்வாளர்கள்...பற்றாளர்கள்....இனமான தமிழாழர்கள் இதையெதிர்த்தெல்லாம் பொங்கியெழுந்து போராட மாட்டாங்களா?

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இதையெல்லாம் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை....ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்....எவ்வளவோ பார்த்துட்டோம்....இதையும் பார்த்துருவோம்.

நேற்று எம்.ஜி.ஆரை குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப்போனது...ஹி..ஹி...

ஏன் ஒரு பதிவர் கூட தீக்குளிக்கலை?

Thursday, April 9, 2009

இந்த தலைப்பு இங்கே பலருக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ரென கோபத்தை வரவைக்கும்தான். இந்த மேட்டரை வைத்துக் கொண்டு எத்தனை சீன் போட்டார்கள் இந்த பதிவர்கள்....நினைத்தாலே புல்லரிக்கிறது. எனக்கு தெரிந்து ஈழத்துயர் குறித்து சகோதரி தூயா மற்றும் தமிழ்நதியின் பதிவுகளை தவிர்த்து பெரும்பான்மையான பதிவுகளில் ஒரு வித போலித்தனமே மிஞ்சியிருந்தது. தங்களின் இந்த போலித்தனத்தையும், விளம்பரவெறியையும் இன உணர்வு போர்வைக்குள் இருத்திக்கொண்ட அவலத்தினை பொறுக்கவியலாமல் கேள்வி எழுப்பிய சிலரும் சோனியாவின் அடிவருடியாக, பார்ப்பன குஞ்சாக பட்டம் சூட்டப்பட்டது இந்த கேலிக்கூத்தின் உச்சம்.

தீக்குளித்து செத்துப்போனவர்களின் படங்களை தங்கள் பதிவில் போட்டுக்கொள்ள இவர்கள் காட்டிய ஆர்வத்தில் விளம்பரப்பிரியமே மேலோங்கியிருந்தது என்றால் மிகையில்லை. நான் கூட இந்த இன உணர்வாளர்கள் தங்களால் ஆன அளவு நிதியெதுவும் திரட்டி தற்கொலையாளர்கள் கைவிட்டுப் போன அவர்தம் குடும்பத்தார்க்கு வழங்குவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தேன். ஒரு பதிவர் இருபது லட்சம் திரட்டி தரப்போவதாக பதிவு போட்டதெல்லாம் இப்போது என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இதில் இன்னொரு வகை பதிவர்கள்....ஈழத்தின் உண்மையான கள நிலவரம் எதுவும் தெரியாமல் தமிழ்நெட் போன்ற தளங்களின் செய்திகளை வைத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு உண்மைக்கு சற்றும் நெருக்கமில்லாத செய்திகளை ஊதிப்பெருக்கி பதிவாக்கியதை கேலிக்கூத்தென்பதா இல்லை வஞ்சப்புகழ்ச்சியென்பதா?

இடது சாரி பதிவர்களாய் காட்டிக்கொள்வதில் சிலருக்கு எப்போதுமே அலாதிபிரியம்.....இந்த கொள்கை குஞ்சுகள் ரிலையன்ஸ் நம்மூரில் கடை பரப்பியபோது காட்டிய ஆவேசத்தை பார்த்து நான் ரொம்பவே சந்தோசபட்டேன்....எகிறி குதித்து அம்பானியின் குமட்டில் குத்திவிடுவார்கள் என்றெல்லாம் கூட நம்பினேன்.....என்னவாயிற்று?..... இந்த வறட்டுக் கூச்சல் ஆசாமிகளுக்கு ஈழப்பிரச்சினை பார்த்தவுடன் தேன் குடித்த நரியாய் தங்கள் சாமர்த்தியங்களையெல்லாம் திரட்டி உருட்டி மத்திய மாநில அதிகார மய்யங்களை குறி வைத்தெறிந்து கூத்தாடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த செம்மறியாட்டு மந்தையில் சில கட்சி அபிமானிகளும் தங்கள் கட்சியை விமர்சிக்கிறேன் பேர்வழியென மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொண்டது தமாஷான தமாஷ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் வேதனைகளை பதிவில் வடிப்பதற்க்கும், இங்கே எல்லாவிதமான சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு நாங்களும் வேதனைப்படுகிறோமாக்கும் என்பதை காட்டிட பதிவிடுவதற்க்கும் உணர்வு ரீதியாக நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.அவர்களின் வலி நிஜமானது...இழப்புகள் ஈடு செய்ய இயலாதது. அவர்களின் ஆத்திரத்தையும், இயலாமையின் கொதிப்பையும், எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தையும் நாம் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்

இவர்களுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது....இன உணர்வு என்பீர்கள்....அதெல்லாம் இல்லை....இல்லவே இல்லை...இவர்கள் அனைவரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்...அதுதான் இவர்களிடத்தே உள்ள ஒற்றுமை. திரு,பிரபாகரனாகட்டும், ராஜபக்சேயாகட்டும், சோனியாவாகட்டும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு எடுத்தது போல சகட்டும் மேனிக்கு எழுதும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனம்தான் இவர்களின் ஒற்றுமை.

அநேகமாய் எல்லா சாவு வீடுகளிளும் காணக்கிடைக்கும் ஒரு காட்சி....வீட்டின் வாசல்படி வரை சிரித்துப் பேசிக்கொண்டு வருவார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே...கண்ணீர் தேக்கி பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைப்பதும், வீட்டை விட்டு வெளியே வரும்போது எதுவும் நடக்காதது போல கெக்கே பிக்கேவென சிரித்துக் கொண்டு செல்வதை பார்க்க இயலும். அது கூட இன உணர்வுதான்....அத்தகைய இன உணர்வுதான் பதிவுலகில் பெரும்பான்மையாக காண முடிகிறது. இதுவா இத்தருணத்தின் தேவை. இதையா ஈழச்சகோதரன் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

இன்றைக்கு ஈழத்தமிழனின் உடனடித் எதிர்பார்ப்பு தனி தமிழ் ஈழமோ, பேச்சுவார்த்தையோ அல்ல.....உயிருக்கு உத்திரவாதம், உடமைகளுக்கு பாதுகாப்பு...அடுத்த வேளை உணவு. இதுதான் இன்றைய நிதர்சனம், இந்த உத்திரவாதத்தை பெறுவதுதான் இந்த போராட்டங்களின் இலக்காய் இருக்கவேண்டும். ஏனெனில் விடுதலை புலிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டிய சூழலில், தங்களை நம்பியிருந்த அப்பாவிகளை எங்கேயிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும். எனக்குத் தெரிந்து எவரும் இதை முன்வைத்து பதிவிடவோ, போராடவோ முனையவில்லை.

ஈழப்பிரச்சினை குறித்து விவாதிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்...எரிகிறவீட்டில் பிடுங்கியது வரையில் ஆதாயமென்கிற மாதிரி, ஒரு சமூகம் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணர்வாளன் என்கிற போர்வையில் விளம்பரம் தேடிய...தேடிக்கொண்டிருக்கின்ற பதிவர்களை பற்றியதே.....இந்த பதிவின் தலைப்பும் அத்தகைய மகா நடிகர்களை நோக்கியதே !

தாய்மையே போற்றி....

Tuesday, April 7, 2009



இவள் எனக்கு
தாயாய்... தமிழாய்...
தகையாய்...தருவாய்...உருவாய்
காட்டப்பட்டவள்...

பெரிதான எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாததால்
இதுவரையில் எனக்கு ஏமாற்றங்களில்லை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவளென
இன்றைக்கும் நம்புகிறேன்.

இஸ்லாமிய நண்பனின் திருமணத்தின் போது
அவன் தாய் இரண்டு பத்திரிக்கைகளை கொடுத்து
இதை மீனாட்சிக்கு வச்சிட்டு ஒன்னை எடுத்துட்டு வர்றியா?
என கேட்டபோதுதான் இவளின் எல்லைகள் எனக்கு புரிந்தது.

மதுரைக்கு இவள்தான் எல்லாமே!
இவளின்றி எதுவும் அசையாது என சொல்லிக் கொண்டே
எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு அசைத்துக் கொண்டிருக்கும்
புண்ணியவான்கள் நாங்கள்....

இன்றைக்கு அன்னைக்கு குடமுழுக்கு
நிஜமாகவே இதயம் இனிக்கிறது
கண்கள் பனிக்கிறது...

இத்தனை வருடத்தில் உன்னிடத்தில் அன்பைத் தவிர
வேறெதையும் கேட்காதவன்
இந்த நாளில் கேட்கிறேன்....

ஈழத்தில் அமைதி தா....

தருவாயென்கிற நம்பிக்கையுடன்
பணிகிறேன் உன் பாதம்....
தாயே போற்றி
தமிழே போற்றி
தகையே போற்றி

-யட்சன்

மெய்யாலுமே நான் முட்டாளுதான்...

Tuesday, March 31, 2009

இன்னிக்கு ஒரு நாளைக்கு மூளைக்கு ரெஸ்ட் குடுக்கறதுன்னு முடிவு பண்ணினதால போன வருசம் எழுதுன பதிவையே மறுபதிப்பா கொடுக்கிறேன்...ஆனாலும் உங்களுக்கு இந்த பதிவின் கடைசியில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

இப்போ முதல்ல சொன்ன ஆச்சர்யம்....

1. மூளையே இல்லாத ஒருத்தன் மூளைக்கு ரெஸ்ட் கொடுக்க முடியுமா?

2.ஆச்சர்யம்னு சொன்ன உடனே கடைசிக்கு ஓடி வந்த உங்களை எதுல சேர்க்கிறது....ஹி..ஹி..வாங்க வந்து நம்ம ஜோதியில கலந்துக்கங்க

கருணா மினிஸ்ட்டராய்டாராம்ல....

Tuesday, March 10, 2009



ஹேய் மக்கா! இப்ப இவரு தேசிய ஒருமைபாட்டு மினிஸ்டராம்ல...

இதுவரை ஒரு பயபுள்ளையும் இதபத்தி பதிவு போடலை போலருக்கு..

வேலைக்கேத்த கூலி கொடுக்கறதுல ராசபக்சே நியாயமான ஆளுன்னு ப்ரூவ் பண்ணீட்டாரு..

வாங்கய்யா வாழ்த்துச்சொல்லுவம்...

பின்குறிப்பு :

யாராவது அவர் மூஞ்சில ஒரு திருட்டுக்களை தெரியுதுன்னோ, அவர் ஒரு விபீசனன்னோ அல்லது வேற மாதிரியோ திட்டி பின்னூட்டம் போட்டா அதையேல்லாம் அப்படியே அலவ் பண்ணீருவேன். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...ஆமா சொல்லீட்டேன் :)

ங்கொய்யால...திரும்ப வந்துட்டம்ல...

Monday, March 9, 2009


எம்புட்டு நாளுதான் தேமேன்னு வேடிக்கை பார்க்கறது...நெறய எழுதனும்னு நினைசாலும் அதெல்லாம் அப்பப்ப நெனப்போட போயிருச்சு...என்னத்த எளுதி, என்னத்த படிச்சி...என்னத்த பின்னூட்டம் போட்டுன்னு...இருந்தது போரடிச்சதனால இனிமேல தெனமும் எளுதிக்கிளிச்சி தமிழ் வலையுலகத்தை காப்பாத்தனும் முடிவுபணி களத்துல குதிச்சிட்டேன்.



நேத்திக்கு அரைப்பாவாடைன்னு ஒரு பதிவு...பார்த்தவுடனே வயசுக்கேத்த பதிவா இருக்கேன்னு ஜெர்க் ஆகி..எகிறிகுதிச்சு உள்ள போனா அந்தம்மா அவங்கள அரைபாவாடை போடவிடாத கொடுமையை புலம்பிருந்தாங்க...வருத்தமா போச்சு, அப்பாலிக்கா ...ஆஹா இதப் படிக்கவா எகிறிகுதிச்சோம்னு... செம கடுப்பாய்டுச்சி

அரைபாவாடைன்னு தலைப்பு போட்டா உள்ளார அப்டிக்கா இப்படிக்கா நாலஞ்சு படம் போடோனும்...அப்பத்தான் நம்ம ஏரியாவுக்கு வந்து போறவுகளுக்கு சந்தோசமா இருக்கும்....இதெல்லாம் அவுகளுக்கு புரியாது அதுனால நமக்கு நாமே திட்டத்தின் கீழ இங்கன ரெண்டு புள்ளைங்க படம் போட்ருக்கேன்...ஹி..ஹி...

சமீபத்துல வலை பதிவுகள் எல்லாம் ஒரே மாதிரியான பேட்டர்ன்ல இருந்தது மாதிரியான எரிச்சலான விசயம் வேறெதும் இருந்திருக்க முடியாது...

அநேகமா எல்லா பதிவரும் தமிழின உணர்வு தறிகெட்டு ஓட, எங்கூட்டுக்காரரும் அரண்மனையில வேலபார்ககிறாருங்கற மாதிரி பிழிய பிழிய ஈழப்பிரச்சினைய பிரிச்சி மேஞ்சதுதான் பெரிய கேலிக்கூத்து....இதுல நெறய பேர் மல்லாக்க படுத்துட்டு எச்சி துப்புனதுதான் ஹைலைட்....ஹி..ஹி..

இது வரை இந்த பிரச்சினையை எழுதாத தமிழின துரோகிகளுக்காக சில தலைப்பு வச்சிருக்கேன்...யாராச்சும் தேவைபட்டா யூஸ் பண்ணிக்கங்க...

”பிரபாகரன் மீசை மயிர்தான் அண்ணன் சீமான்”

”சோனியா மேனியாவும் சொரனையற்ற தமிழனும். ”

”கருனாநிதிக்கு முதுகெலும்பு...மருத்துவ ஆச்சர்யம் - வாய் பிளந்த டாக்டர்கள் ”

”சோ ஒரு சொக்கத்தங்கம்”
(அநேகமா இதை டோண்டு ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருப்பார். அவர் கைல பெர்மிசன் வாங்கீடுங்க)...

இன்னும் நெறய எளுதனும்யா....அப்புறமா வர்றேன்.


நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்....

Friday, February 13, 2009



காதலர் தினத்துக்கு மொய் வைக்கனும்ல...அதான்!

ஆளுக்கு ஒரு பாட்டா டெடிக்கேட் பண்ண முடியாது,....ஹி..ஹி...அதுனால இந்த பாட்டையே எல்லாரும் (எல்லாரும்னா...முன்னாள், இன்னாள் மற்றும் எதிர்கால....ன்னு அர்த்தம்) தங்களுக்கே டெடிக்கேட் பண்ணினதா நினைச்சிக்கங்க.....

காதலுடன்...

-யட்சன் (!)

சிரித்தவன் அழுகிறேன்....

Friday, January 30, 2009




நன்றி அய்யா...

உமது ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளும்...

-யட்சன்

முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்....

தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.தற்கொலைகள் மன்னிக்க முடியாதது.....

சாகும்வரை உண்ணாநிலையெடுத்தவர்கள், கள்ளத்தோணியேறியவர்களுக்கில்லாத இன உணர்வினை இந்த இளைஞர் எங்கிருந்து பெற்றார்?...நிதர்சனங்களை மீறிய மூளைச்சலவை இத்தகைய முடிவுகளுக்கு இட்டுச்சென்றிருக்கலாம்தான்...ஆனால் இத்தகைய சலவையாளர்கள், கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் எந்த சேதாரமுமில்லாமல் நேற்றைக்கும், இன்றைக்கும் ஏன் என்றைக்குமிருப்பார்கள் என்பதை அந்த இளைஞர் உணராமல் போனதை என்னென்பேன்.

விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை, ஆனால் இன்றைக்கும் அதே வரையரையாய் போனதுதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணாயிருக்குமென நினைக்கிறேன்.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லாத நிலையில்...விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.

அடிப்படை நேர்மையில்லாத இரண்டு சுயநலவாதிகள் கணக்குத்தீர்ப்பதின் இன்னொரு அத்தியாயமே இன்றைய இலங்கை நிலவரம்.உண்மையில் இதன் பாதகங்கள் அனைத்துமே ஏதுமறியாத அப்பாவி பொதுமகனும் அவன் பிள்ளை குட்டிகளுக்கும்தான்...இந்த இழப்புகளுக்கும், வேதனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய குற்றவாளிகள் ராஜபக்‌ஷேவும், பிரபாகரனும்தான்.

’துன்பியல் நிகழ்வு’ என்பது அலங்கார பூசிமெழுகல் வார்த்தையில்லை, அதன் வலியும் வேதனையும் எத்தனை கொடூரமானது என்பதை தெரிந்து கொள்ள புலிகள் மிகப்பெரிய விலை கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை....

இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு புத்தி வர முப்பதாண்டுகள் ஆகியிருக்கிறது, இந்தியா மாதிரியான பிராந்திய வல்லரசின் துனையில்லாமல் பயங்கரவாதத்தினை அழித்தொழிக்கமுடியாது என்பதை உணர்ந்ததன் விளைவே தற்போதை வெற்றிகள்.மிகவும் தீர்க்கமான திட்டமிடலும், நேர்த்தியான செயல்பாடுமே வலுவான ஒரு எதிரியினை முடக்க முடியும். இதை இலங்கை,இந்தியா மாதிரியான துனையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.

எதிரியினை குறைவாக மதிப்பிட்டதும், தனது திறமை மீது அதீத தற்பெருமை கொண்டிருந்ததும்தான் இன்றைய புலிகளின் பின்னடைவுக்கு காரணமாயிருந்திருக்கும்.இந்தியா மாதிரியான ஒரு அண்டை சக்தியினை நட்புடன் கையாளத்தெரியாததும் இன்னொரு பின்னடைவு, வைக்கோ மாதிரியான அட்டைக்கத்தி வீரர்களை நம்பாமல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,சுர்ஜீத் சிங்க் மாதிரியான செயல்வீரர்களை எளிதில் அனுகும் வாய்ப்பிருந்தும் அதை ஏன் கோட்டைவிட்டார்கள் என்பது எனக்கு இன்னமும் பிடிபடாதது.

குற்றம் குறைகளை சுட்டிய நான் அதற்கான எனது தீர்வுகளை அடுக்காமல் போனால் நான் ஒருதலைபட்சமானவனாய் தீர்மானிக்கப்படுவேன், எனக்கு அதில் உடன்பாடில்லை.நடந்தது நடந்து விட்டது, இனி நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான அரசியல் தீர்வொன்று கிடைக்குமானால் அது தமிழகத்திலிருக்கும் அரசியல் வாதிகளால் ஆகாது, ஆனால் தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறானே அந்த சாமானிய தமிழனால் மட்டுமே முடியும்.

தற்போதைய சூழலில் புலிகள் என்பதுகளின் துவக்கத்தில் தமிழக ஆதரவினை திரட்ட எத்தகைய பிரச்சார உத்தியினை மேற்கொண்டார்களோ அத்தகைய செயல்பாடொன்றினை மிகத்தீவிரமாய் தமிழக்த்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவசெய்தல் அவசியம், என்ன அன்றைக்கு ஆளும் அரசின் ஆதரவிருந்தது, இன்றைக்கு அத்தனை வெளிப்படையான ஆதரவில்லைதான், ஆனாலும் கலைஞர் நிச்சயம் உதவுவார்.ஈழத்தமிழனின் அவலத்தினை உணர்ச்சிவயமில்லாமல், நிதானமாய் மூலைமுடுக்கெல்லாம் வேதனையான பக்குவத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை திருமாவளவனிடம் இருக்கிறது.வடமாவட்டங்களில் இதை ராமதாஸை கொண்டு சாதிக்கலாம்.

தூங்கிவழியும் தமிழன் சிலிர்த்தெழுவார்களேயானால், காங்கிரஸ் அடிப்பொடிகள் வாயையும்,மற்றதையும் பொத்திக்கொண்டு காணாமல் போய்விடுவர், பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் வேளையில் ஓட்டுக்காகவாவது மத்திய அரசு இலங்கை அரசினை தற்காலிகமாய் முடக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பது திண்ணம். இந்த அவகாசத்தில் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு புலிகள் தங்களை தயார்செய்து கொள்வதும் பிரச்சினையின் தீர்வுக்கு அவசியமான அவசியம்.

விடுதலைபுலிகள் சில தியாகங்களுக்கு தயாராக வேண்டிய அவசியம் வந்திருக்கிறது, அவர்கள் போராடும் தமிழர்களுக்காக இதை செய்துதானாக வேண்டும்...செய்வார்களா?

இத்தாலியின் கண்ணகி !

Wednesday, January 28, 2009



புகார் கண்ணகியின் கோபத்தால்...

எரிந்தது மதுரை !

இத்தாலிய கண்ணகியின் மௌனத்தால்...

எரிகிறது தமிழ் ஈழம்ம்ம்ம்ம்ம்ம்

கோவலன்கள் யோக்கியமாய் இருக்க வேண்டிய அவசியமில்லை போலும் !

வாழிய கற்பின் திறன் !

இனி காங்கிரஸார் பொங்கல் வைத்து கொண்டாடலாம்!

ஹேப்பி பர்த்டே வாத்யாரே....!

Saturday, January 17, 2009



மருதூர் கோபாலமேனன் ராமசந்திரனுக்கு இன்று 93 வது பிறந்தநாள்...

இப்படிச்சொன்னால் எத்தனைபேருக்கு தெரியும்....

ஏழைகளின் இதயதெய்வம்(நன்றாக கவனிக்கவும்”ஏழைகளின்”), பொன்மனச்செம்மல்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இன்று பிறந்தநாள். அநேகமாய் தேர்தல் சமயங்களில் மட்டுமே நினைக்கப்படும் அளவிற்கு சுருக்கபட்டு விட்ட ஒரு மனிதனின் பிறந்த நாள்.

அரசியல் எம்.ஜி.ஆரை எனக்கு எப்போதுமெ பிடித்ததில்லை, ஆனால் ஒரு நடிகராய் அவரின் தீவிர ரசிகனென சொல்லிக்கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு புளகாங்கிதமிருந்ததுண்டு. மிகச்சிறந்த நடிகரென அவரை சொல்லிவிடமுடியாது, ஆனாலும் தேசிய விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேறெந்த பொழுதுபோக்குமில்லாத அன்றைய சூழலில் உழைத்துக் களைத்துவரும் சாமான்யனை வேரோடும் தூரோடும் மகிழ்வித்த கலைஞர்.

தன் படங்களில் எப்போதும், தன்னை எப்பொழுதும் ஒரு மகாமனிதனாய் காட்டிக்கொண்டதில்லை, சாமனியனின் குரலாய் ஒலித்ததில்தான் அவரது வெற்றியிருந்திருக்க வேண்டும். அவரின் கவர்ச்சியும், ஆளுமையும் இன்றைய கதாநாயகர்களிடம் தேடினாலும் கிடைக்குமா சந்தேகமே....

இன்றைக்கும் அவரின் படங்களை பார்ப்பது ஒரு சந்தோஷ அனுபவமே....

ஹேப்பி பர்த்டே...வாத்யாரே !

பொங்கல் வாழ்த்து ....மிஸ் பண்ணீராதீங்க!

Wednesday, January 14, 2009



பக்கத்துவூட்ல இழவு வுளுந்து கெடந்தாலும், ஊரெல்லாம் சந்தோசமா பொங்கலையும், புத்தாண்டையும் டீவி பொட்டியோட கொண்டாடறத பார்க்கும் போது எனது மனித நேயம் சிலிர்த்துப் போகிறது...

என்னை மாதிரி அசட்டுப்பயலுகதான் மனசு சரியில்லாம பண்டிகைய கொண்டாடாம வுட்ருக்கோம்....ம்ம்ம்ம்ம்

சத்தியமா சொல்றேன், நாட்டின் இறையாண்மைக்கு எதிரா ஏதும் எழுதலைங்ன்னா...!

எனிவே...ஹேப்பி பொங்கல் ட்யூட்ஸ்